அக்டோபரில் வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் இன்று (அக்.19) தன் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் (தமிழ்நாடு வெதர்மேன்) பிரதீப் ஜான்.
இன்று (அக்.19) காலை 7.30 மணிக்கு தன் முகநூல் பக்கத்தில் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:
`சென்னை (கே.டி.சி.சி.) உள்ளிட்ட வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் கூட நல்ல மழை பெய்துள்ளது. அதே போன்ற சூழலில் நாளையும் இரவு முதல் காலை வரை நல்ல மழை பெய்யும்.
(இன்று) இரவு முதல் காலை வரை பாதிப்பில்லாத வகையில் பெய்யும் மழை, ஞாயிற்றுக்கிழமை காலையிலும் வட தமிழகத்தில் பெய்யும். அடுத்த சில நாட்களுக்கு இதே போன்ற ஒரு சூழல் கே.டி.சி.சி (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு) மற்றும் வட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நிலவும்.
அடுத்ததாக வரும் அக்டோபர் 22 முதல் 25 வரை வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது. அது தொடர்பான செய்திகளை நாம் புறந்தள்ளிவிடலாம். ஏனென்றால் அந்தப் புயல் ஆந்திரா மற்றும் ஒடிஷா பகுதிகளை நோக்கி நகர்ந்துவிடும்.
பெங்களூருவில் இன்று (அக்.19) நடைபெறும் இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் போட்டி மழையால் நிச்சயமாக 100 சதவீதம் பாதிக்கப்படும்’ என்றார்.