கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

2026-ல் விஜய் முதல்வர் ஆவாரா?: கருத்துக் கணிப்பு சொல்வது என்ன?

சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பின்படி தமிழ்நாட்டில் திமுக அரசின் செயல்பாடு மீது 15% பேர் திருப்தியடைந்திருக்கிறார்கள்

கிழக்கு நியூஸ்

2026-ல் தமிழ்நாட்டின் முதல்வராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற கருத்துக் கணிப்பை சி வோட்டர் நடத்தியுள்ளது.

சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பின்படி தமிழ்நாட்டில் திமுக அரசின் செயல்பாடு மீது 15% பேர் திருப்தியடைந்திருக்கிறார்கள். 36% பேர் ஓரளவுக்கு திருப்தியடைந்திருப்பதாகவே கூறியிருக்கிறார்கள். 25% பேர் திமுக அரசு மீது அதிருப்தி இருப்பதாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 24% பேர் முடிவு செய்ய முடியவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

முதல்வராகத் தனிப்பட்ட முறையில் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகள் மீது 22% பேர் மிகவும் திருப்தியடைந்துள்ளார்கள். 33% பேர் ஓரளவுக்கு திருப்தியடைந்துள்ளார்கள். 22% பேருக்கு முதல்வராக மு.க. ஸ்டாலினின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்கள். 23% பேரால் முடிவு செய்ய முடியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்தும் மக்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். இதில் வெறும் 8% பேர் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மீது திருப்தியடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். ஆனால், 27% பேர் ஓரளவுக்கு திருப்தியடைந்திருக்கிறார்கள். 32% பேருக்கு எடப்பாடி பழனிசாமியின் செயல்பாட்டில் சுத்தமாக திருப்தியில்லை. 33% பேரால் முடிவு செய்ய முடியவில்லை.

2026-ல் முதல்வர் ஆவதற்குச் சரியானத் தேர்வாக யார் இருப்பார் என்றும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்படி, மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவதற்குச் சரியானத் தேர்வாக இருப்பார் என 27% பேர் கருத்து தெரிவித்துள்ளார்கள். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வராவதற்கு 18% பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். முதல்வர் பதவிக்குத் தகுதியானவர் என எடப்பாடி பழனிசாமிக்கு 10% பேர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வெறும் 9% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

சி வோட்டர் கருத்துக் கணிப்பின்படி முதல்வர் ஆவதற்குச் சரியான தேர்வு யார்?

  • மு.க. ஸ்டாலின் - 27% பேர் விருப்பம்

  • விஜய் - 18% பேர் விருப்பம்

  • எடப்பாடி பழனிசாமி - 10% பேர் விருப்பம்

  • அண்ணாமலை - 9% பேர் விருப்பம்