தமிழ்நாடு

சி.வி. சண்முகம் அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டும்: உச்ச நீதிமன்றம்

முதல்வர் ஸ்டாலின் குறித்து சி.வி. சண்முகம் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவருடைய விமர்சனம் மோசமானது என்று கருத்து தெரிவித்தனர்.

ராம் அப்பண்ணசாமி

ஒரு மாநில முதல்வரை ஒருமையில் தரம் தாழ்த்திப் பேசியது அவதூறுதான், எனவே சி.வி. சண்முகம் அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2023 மார்ச் மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கடை வீதியில், அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம், தமிழ்நாட்டில் நடைபெறும் மதுபான விற்பனை, கஞ்சா புழக்கம், 12 மணி நேர வேலை தொடர்பான சட்டத் திருத்தம் ஆகியவற்றை முன்வைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில், சி.வி.சண்முகத்திற்கு எதிராக 4 அவதூறு வழக்குகளை தொடர்ந்தது தமிழக அரசு. தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சி.வி.சண்முகம்.

சி.வி. சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவர் மீது தொடர்பட்ட இரு அவதூறு வழக்குகளை ரத்து செய்தது. ஆனால் மற்ற இரு அவதூறு வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது. இதனை அடுத்து மற்ற இரு அவதூறு வழக்குகளை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சி.வி. சண்முகம்.

இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சுதான்சு தூலியா, பிரசன்னா பாலச்சந்தர வராலே அமர்வுக்கு முன்பு கடந்த செப்டம்பரில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் குறித்து சி.வி. சண்முகம் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவருடைய விமர்சனம் மோசமானது என்று கருத்து தெரிவித்தனர். அதன்பிறகு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சி.வி. சண்முகத்தின் மேல்முறையீட்டு வழக்கு மீது மீண்டும் இன்று (நவ.26) விசாரணை நடைபெற்றது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் `பொது வாழ்வில் இருப்பவர்கள் விமர்சனத்தை முன்வைக்கும்போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். முதல்வர் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவித்தால் வழக்கை சந்தித்துதான் ஆகவேண்டும்’ என்றனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான மறு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.