கோப்புப்படம் படம்: https://x.com/CVShanmugamofl
தமிழ்நாடு

"தலைமைக் கழகத்தை காலால் உதைத்தவர்களை...": சி.வி. சண்முகம் பேச்சும் ஓபிஎஸ் பதிலும்! | OPS | ADMK |

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைவீர்களா என்ற கேள்விக்கு ஓ. பன்னீர்செல்வம் சொன்ன பதில் கவனம் பெற்றுள்ளது.

கிழக்கு நியூஸ்

அதிமுக தலைமை அலுவலகத்தைக் காலால் உதைத்தவர்களைக் கட்சியில் சேர்க்க வேண்டுமா என அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு, சி.வி. சண்முகம் வீட்டு வாசலில் யார் கூட்டணிக்கு நின்றுகொண்டிருக்கிறார்கள் என ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக. எம்.பி. சி.வி. சண்முகம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற குரல்களை விமர்சித்துப் பேசினார்.

"அதிமுக இணைய வேண்டும் என்கிறார்கள். எங்களை இணையச் சொல்ல நீங்கள் யார்? அவர்கள் நீக்கப்பட்டவர்கள். கட்சிக்குத் துரோகம் இழைத்ததற்காக நீக்கப்பட்டவர்கள் அவர்கள். எந்த அதிமுக அவர்களுக்கு அடையாளம் தந்ததோ, பதவி கொடுத்து அழகு பார்த்ததோ, அந்த அதிமுகவின் தலைமைக் கழகத்தைக் காலால் எட்டி உதைத்தத் துரோகிகளை இந்தக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறோம். அவர்களை நாங்கள் சேர்க்க வேண்டுமா? அவர்களைச் சேர்க்க வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்றார் சி.வி. சண்முகம்.

இதைத் தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் சி.வி. சண்முகம் பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்கு, "கூட்டணி சேர வேண்டும் என்று சி.வி. சண்முகம் வீட்டு வாசலில் யார் தற்போது நின்றுகொண்டிருக்கிறார்கள்?" என ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

மேலும், விஜய் குறித்த கேள்வியையும் செய்தியாளர்கள் எழுப்பினார்கள். அதற்கு, "அவருக்கு (விஜய்) ஒரு மிகப் பெரிய கூட்டம் கூடுகிறது. அதை மறுக்க முடியாது. அது வாக்காக மாறுமா என்பதைத் தேர்தல் நடந்து பதிவான வாக்குகளை எண்ணிய பிறகு தான் சொல்ல முடியும்" என்றார் ஓ. பன்னீர்செல்வம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணையுமாறு அண்ணாமலை எதுவும் பேசினாரா, அவரிடமிருந்து அழைப்பு வந்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைவீர்களா? என்றும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இக்கேள்விக்கு, "தற்சமயம் இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை" என்று பதிலளித்தார்.

முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்துப் பேசினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செப்டம்பர் தொடக்கத்தில் அதிமுக ஒன்றிணைய வேண்டும், அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என செய்தியாளர்களை அழைத்து வெளிப்படையாகப் பேசினார். இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் வகித்து வந்த கட்சிப் பதவிகள் அனைத்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பறிக்கப்பட்டன. இருந்தபோதிலும், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற குரல்களுக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படாமல் உள்ளது.

O Panneerselvam | ADMK | AIADMK | OPS | CV Shanmugam |