கடலூர் சிப்காட்டில் ரசாயண புகை கசிந்த தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கடலூர் - சிதம்பரம் சாலையில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் நேற்று (செப். 5) திடீரென ரசாயண புகை வெளியேறத் தொடங்கியது. தொழிற்பூங்காவில் உள்ள கிரிம்சன் ஆர்கானிக்ஸ் என்ற தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே புகை வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. பச்சிளம் குழந்தைகள் உட்பட 89 பேர் பாதிக்கப்பட்டு கடலூர் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையின் கண்ணாடிகளை அடித்து உடைத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டோரை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
“கடலூர் சிப்காட்டில் ரசாயண புகையைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட 89 பேருக்கும் தற்போது உடல்நிலை சீராக உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையை ஆய்வு செய்து, விதிமீறல்கள் ஏன் நடக்கின்றன என்று கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நாளை ஆய்வு செய்யவுள்ளனர். மக்களின் உயிரே முக்கியம் என்ற அடிப்படையில் அரசு செயல்படுகிறது. இந்த தொழிற்சாலையில் இதுபோன்ற விதிமீறல்கள் நடந்திருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.
SIPCOT Chemical gas leak | Protest | Minister MRK Panneerselvam