கடலூர் அருகே உள்ள சிப்காட் தொழில் மையத்தில் ரசாயன புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. புகை கசிவால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் - சிதம்பரம் இடையில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 50-க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (செப். 5) காலை திடீரென அப்பகுதியில் ரசாயன புகை வெளியேறத் தொடங்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக கிரிம்சன் ஆர்கானிக்ஸ் என்ற தொழிற்சாலைக்குள் விபத்து ஏற்பட்டதால் புகை அப்பகுதியை ஒட்டிய குடிகாடு உள்ளிட்ட பல கிராமங்கள் முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. பச்சிளம் குழந்தைகள் உட்பட 50 பேர் மயங்கி விழுந்துள்ளனர்.
இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மயங்கி விழுந்தவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதற்கிடையில், தொழிற்சாலை விபத்து காரணமாகத்தான் ரசாயன புகை பரவியது என்பதை அறிந்த மக்கள், தொழிற்சாலையின் கண்ணாடிகளை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் திரண்டனர். தற்போது, விபத்து ஏற்பட்ட பகுதிகளில் கோட்டாட்சியர் சுந்தரராஜன், வட்டாட்சியர் மகேஷ், வருவாய்த் துறை மற்றும் மாசுக்கட்டுபாட்டுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே இப்பகுதியில் கடந்த 2021-ல் பாய்லர் வெடித்து நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறிய நிலையில், தொடர்ச்சியாக விபத்துகளை நடந்து வரும் தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Cuddalore | SIPCOT | Chemical gas leak | Protest