சிடிஆர் நிர்மல் குமார் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்: சிடிஆர் நிர்மல் குமார் | Karur Stampede |

காவல்துறையும் தமிழ்நாடு அரசு தவறு செய்த இடங்களை காணொளி ஆதாரத்துடன் சிபிஐயிடம் சமர்ப்பித்துள்ளோம்...

கிழக்கு நியூஸ்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இதுகுறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணித்து வருகிறது. முதற்கட்டமாக சிபிஐ அதிகாரிகள் கரூரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தவெக நிர்வாகிகள் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

தில்லியில் சிபிஐ விசாரணை

அதனடிப்படையில் கடந்த டிசம்பர் 29 முதல் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் ஆஜராகி விளக்கமளித்தனர். தவெக நிர்வாகிகள் மட்டுமன்றி, கரூர் மாவட்ட ஆட்சியர் எம். தங்கவேல், கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கய்யா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி வி. செல்வராஜ், கரூர் நகர காவல் ஆய்வாளர் ஜி. மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆஜராகினர். தொடர்ந்து 3 நாள்கள் நடந்த விசாரணை இன்று நிறைவடைந்தது.

“உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்“

இதைத் தொடர்ந்து தில்லியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் விசாரணை குறித்து விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:-

“எங்களிடம் கேட்கப்பட்ட விளக்கங்களைச் சமர்ப்பித்திருக்கிறோம். விசாரணைக்குத் தேவைப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கிறோம். இன்றுடன் சிபிஐ விசாரணை நிறைவடைந்தது. எங்கள் தரப்பில் உள்ள அனைத்து ஆவணங்களையும் கொடுத்திருக்கிறோம். தேவைப்பட்டால் மீண்டும் வந்து எங்கள் தரப்பைப் புரிய வைக்க கடமைப்பட்டுள்ளோம். இதில் அனைத்து விதத்திலும் நாங்கள் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

தமிழ்நாடு அரசு தரப்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எங்கள் தரப்பைப் பொறுத்தளவில் தமிழ்நாடு அரசு என்னென்ன தவறுகளைச் செய்தது? காவல்துறை என்னென்ன தவறிழைத்தது, இது நடக்காமல் காவல்துறை எப்படி தடுத்திருக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்களை விளக்கிக் கூறியிருக்கிறோம். நிறைய தகவல்களையும் காணொளி ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறோம். நாங்கள் சட்டப்பூர்வமாக இதை அணுகுவதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

We are determined to ensure justice for those who died in the Karur incident, said CTR Nirmal Kumar, Joint General Secretary of the Tevaga.