தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதா?: சிபிஎம் செயலாளர் பாலகிருஷ்ணன்

சாதாரணமாக ஒரு கிராமத்தில் பட்டா கேட்டு இயக்கம் நடத்தினால் கூட, காவல்துறை வழக்குப் போடுகிறது.

ராம் அப்பண்ணசாமி

`ஆர்ப்பாட்டம் என்றாலே காவல்துறை வழக்குப் போடுகிறது, தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா முதல்வரே’ எனப் பேசியுள்ளார் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) 24வது தமிழ்நாடு மாநில மாநாடு, விழுப்புரத்தில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் நேற்று (ஜன. 3) தொடங்கியது.

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் தொடங்கிய இந்த மாநில மாநாட்டில், பிரகாஷ் காரத், பிருந்தா காரத், ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இந்த மாநாட்டில் நேற்று (ஜன.3) பேசியவை பின்வருமாறு,

`சாதாரணமாக ஒரு கிராமத்தில் பட்டா கேட்டு இயக்கம் நடத்தினால் கூட, காவல்துறை வழக்குப் போடுகிறது. ஒரு தெருமுனைக் கூட்டம் என்று சொன்னால் கூட காவல்துறை வழக்குப் போடுகிறது.

ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்குப் போடுகிறது. மாண்புமிகு மரியாதைக்குரிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலையைப் பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படிக் காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது.

போராட்டத்தைக் கண்டு நீங்கள் அஞ்சவேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்றார்.