திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு 
தமிழ்நாடு

சுயமரியாதைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் திமுக பேசவில்லை: இ. கம்யூ மாநில செயலாளர் வீரபாண்டியன் | DMK Alliance |

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு...

கிழக்கு நியூஸ்

திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் திமுகவில் யாரும் பேசவில்லை என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தி, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை இறுதி செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றன. குறிப்பாக 26 கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. அதனால் பல்வேறு கட்டமாக நாள்தோறும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.

திமுக கூட்டணி

இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28, மதிமுகவுக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, கொமதேகவுக்கு 2, மமகவுக்கு 2 ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதுப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழு, முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டது. இதையடுத்து இந்த முறையும் 6 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகள் கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நான்கு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், அக்கட்சிக்கு தற்போது 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக நிர்பந்திக்கவில்லை

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கூறியதாவது:-

“திமுகவுடன் நடந்த நான்கு கட்ட பேச்சுவார்த்தையில் ஒருபோதும் திமுக எங்களை நிர்பந்திக்கவில்லை. கூட்டணியில் பல கட்சிகள் சேர்ந்திருப்பதால் நீங்கள் இதைப் பரிசீலிக்க வேண்டும் என்று முதலமைச்சர் உட்பட அனைவரும் வேண்டுகோள்தான் விடுத்தனர். கட்டளையோ அழுத்தம் தரும் தொனியோ இல்லை. ஒத்துழைக்க வேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டனர். நான்கு கட்ட பேச்சுவார்த்தையிலும் ஜனநாயகத்திற்கு இடம் இருந்தது. சுயமரியாதை பாதிக்கப்பட்டிருந்தால் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதோ கடந்து சென்றிருக்கும். சுயமரியாதைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் திமுக பேசவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுவில் ஆலோசனை மேற்கொண்டபோது இன்றைய அரசியல் சூழலில் நமக்குரிய இடங்களைக் கேட்டுப் பெற வேண்டும். கூடுதலான இடங்கள் நமக்குத் தேவை. 6 தொகுதிகள் வேண்டும் என்பதையாவது வலியுறுத்துவோம் என்றுதான் பேசியிருந்தோம். ஆனால் சூழல் கருதி, எங்கள் அரசியல் நிலைப்பாட்டில் எந்த நெருக்கடியும் வந்துவிடக் கூடாது, அது பிறருக்கு பிரசாரத்திற்கான வாய்ப்பாக அமைந்து விடக் கூடாது என்பதற்காக ஒப்புக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி. வெல்லும் கூட்டணி. இத்தேர்தலில் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதால் ஓரணியில் சேர்ந்துள்ளோம்” என்றார்.

DMK-Communist Party of India state secretary Veerapandian said that no one in the DMK spoke in a way that would harm self-respect as the seat-sharing talks between the party have concluded.