தமிழ்நாடு

கோமியம் அற்புதமான மருந்து: ஐஐடி சென்னை இயக்குநர் காமகோடி

பசு மாதிரியான ஒரு முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்தைப்போல வேறு எந்த ஒரு முதலீட்டிலும் லாபம் கிடைக்காது.

ராம் அப்பண்ணசாமி

பல்வேறு உடல் உபாதைகளுக்குக் கோமியம் அற்புதமான மருந்து என சமீபத்தில் பேசியுள்ளார் ஐஐடி சென்னை இயக்குநர் காமகோடி வீழிநாதன்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மாம்பலம் கோ சம்ரக்ஷண சாலாவின் 49-வது மாட்டுப்பொங்கல் விழா கடந்த ஜன.16-ல் நடைபெற்றது. இதில், காமகோடி பேசியவை பின்வருமாறு,

`கன்றுக்குக் கொடுத்ததுபோக மீதமுள்ளதை உலகிற்குக் கொடுக்கிறது பசு. வைக்கோல், புல், கழநீர் என அனைத்தையும் உண்டு நமக்குப் பால் தருகிறது பசு. பாலில் இருந்து தயிர், வெண்ணெய், நெய் எனப் பலவும் கிடைக்கிறது. இந்த மாதிரியான ஒரு முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்தைப்போல வேறு எந்த ஒரு முதலீட்டிலும் கிடைக்காது.

கோமியமும், சாணமும் நமக்கு மிகப்பெரிய இயற்கை உரம். பஞ்சகவ்யம், அக்னி அஸ்திரம் உள்ளிட்ட பல இயற்கை உரங்கள் இவற்றில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இது பூச்சி விரட்டியே தவிர, பூச்சிக்கொல்லி அல்ல. விபூதி, கொசு விரட்டி உள்ளிட்ட பல பொருட்கள் இதில் இருந்து கிடைக்கின்றன.

கோ சம்ரக்‌ஷணத்தால் மனிதர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன. நல்ல வாழ்வை நமக்கு அளிப்பதற்கு கோ (பசு) மிக முக்கியம் என்பதைப் பல அறிவியல் கோட்பாடுகள் நமக்கு விளக்குகின்றன. நான் இயற்கை விவசாயி என்பதால் அது குறித்துப் பேச எனக்கும் கொஞ்சம் தகுதி இருக்கிறது.

ஒரு பெரிய சன்யாசிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் கோமியத்தைக் குடித்தார். 15 நிமிடங்களில் அவரது காய்ச்சல் சரியானது. பாக்டீரியா, புஞ்சையால் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு கோமியம் அற்புதமான மருந்து. இதன் மருத்துவ குணங்களை நாம் கருத்தில்கொள்ள வேண்டும்’ என்றார்.