தமிழ்நாடு

திருநெல்வேலி மேயர் வேட்பாளர் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன்: திமுக அறிவிப்பு

தொடர்ந்து 3-வது முறையாக திருநெல்வேலி மாநகராட்சியில் கவுன்சிலராக இருக்கிறார் கோ. ராமகிருஷ்ணன்

ராம் அப்பண்ணசாமி

நாளை (ஆகஸ்ட் 5) நடைபெற உள்ள நெல்லை மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக உள்ள ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 2022-ல் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளிலும் அதிக இடங்களைக் கைப்பற்றியது திமுக கூட்டணி. குறிப்பாக திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 50 வார்டுகளைத் திமுக கூட்டணி கைப்பற்றியது.

இதை அடுத்து நடந்த ரகசிய வாக்கெடுப்பில் திமுகவைச் சேர்ந்த 16-வது வார்டு உறுப்பினர் பி.எம். சரவணன் மேயராகவும், 1-வது வார்டு உறுப்பினர் கே. ராஜூ துணை மேயராகவும் கவுன்சிலர்களால் தேர்தெடுக்கப்பட்டனர்.

ஆனால் மேயர் சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே ஒத்துப்போகாததால் இரு தரப்புக்கும் இடையே ஆரம்பம் முதலே மோதல் போக்கு நடைபெற்று வந்தது. திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை.

இதை அடுத்து கடந்த ஜூலை 3-ல் மேயர் பதவியை ராஜினாமா செய்தார் சரவணன். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5-ல் காலியாக இருக்கும் திருநெல்வேலி மேயர் பதவிக்குத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 4) திருநெல்வேலி மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக திருநெல்வேலி மாநகராட்சியின் 25-வது வார்டு உறுப்பினர் கிட்டு என்கிற கோ. ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 3-வது முறையாக திருநெல்வேலி மாநகராட்சியில் கவுன்சிலராக இருக்கிறார் கோ. ராமகிருஷ்ணன்.