ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முதல் விமர்சனத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி திரைப்படம் திரையரங்குகளில் நாளை வெளியாகிறது. ரஜினிகாந்த் தவிர நாகார்ஜுனா, ஆமிர் கான், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்பட பலர் நடித்துள்ளார்கள். பான் இந்தியா அளவுக்கு இப்படம் பெரிய வெற்றியைப் பெறும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை வைத்துள்ளார்கள். மேலும், ரஜினிகாந்த் திரைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதுவும் படத்துக்குக் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள். அண்மையில் வெளியான படங்களிலேயே கூலிக்கு தான் வெளியீட்டுக்கு முன் பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாக திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூலி படத்தைப் பார்த்துள்ளார். ரஜினிக்கு வாழ்த்து கூறியுள்ள அவர், படத்துக்கான விமர்சனத்தையும் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.
நாளை வெளியாகும் அவருடைய ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற மாஸ் என்டர்டெயினராக கூலி திரைப்படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.
‘கூலி’ மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ், சத்யராஜ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஆமிர் கான், சகோதரர் அனிருத், ஸ்ருதி ஹாசன் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பட வெளியீட்டுக்காகத் துடித்துக் கொண்டிருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பதிவு கூடுதல் உத்வேகத்தைத் தந்துள்ளது.
Coolie | Coolie Review | Coolie First Review | Rajinikanth | Lokesh Kanagaraj | Aamir Khan | Amir Khan | Nagarjuna | Shruti Haasan | Sun Pictures | Udhayanidhi Stalin | Deputy CM