PRINT-247
தமிழ்நாடு

சாம்சங் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு...: அமைச்சர் தங்கம் தென்னரசு

இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் தொழிலாளர் நலத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.

ராம் அப்பண்ணசாமி

சாம்சங் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்தப் போராட்டத்தை சிஐடியூ அமைப்பு கைவிட வேண்டும் என்று பேசியுள்ளார் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

இன்று (அக்.09) சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியவை பின்வருமாறு:

`மாநிலத்தில் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு தொழிற்சாலைகள் தொடர்ந்து சிறந்து வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என்ற அக்கறையுடன் ஆரம்பத்தில் இருந்து இந்த பிரச்னையை அரசு அணுகி வந்தது. சாம்சங் ஊழியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க சாம்சங் நிறுவனம் முன்வந்துள்ளது.

சாம்சங் ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் ஊதியத்துடன் அக்டோபர் முதல் தேதியிலிருந்து ரூ. 5000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என சாம்சங் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பணிக்காலத்தில் இறக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு சிறப்பு நிவாரணமாக உடனடியாக ரூ. 1 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது சாம்சங் நிர்வாகம்.

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலையில் செயல்பட்டுவரும் சிஐடியூ அமைப்பு அதன் பதிவு குறித்த கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை நடத்திவருகிறது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் தொழிலாளர் நலத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.

இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்தப் போராட்டத்தை சிஐடியூ அமைப்பு கைவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சிஐடியூவுக்கும் அரசுக்கும் எந்தவிதமான விரோதமும் இல்லை.  தொழிற்சங்கங்களைப் பதிவு செய்வதில் தொழிலாளர் நலத்துறை என்றைக்குமே எதிராக இருந்தது இல்லை’ என்றார்.