தமிழ்க் கலைத்துறையைக் கட்டுப்படுத்த நினைக்கும் மோடி, அமித் ஷாவின் முயற்சிகள் தோல்வியில்தான் முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்காமல் தணிக்கை வாரியம் தாமதப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனை எதிர்த்து தணிக்கை வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்துள்ளது. இதன் விசாரணை நடைபெற்று வருகிறது.
விஜய்க்கு ஆதரவுக் குரல்கள்
மறுபுறம் ஜனநாயகன் படத்தின் மீதான தணிக்கை வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிராக திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் பலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாகவும் மத்திய பாஜகவுக்கு எதிராகவும் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் காணொளி ஒன்றை வெளியிட்டு, மத்திய பாஜகவின் செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூர் காணொளி
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணோளியில் கூறியிருப்பதாவது:-
“வழக்கம்போல் பாஜக, ஆர்.எஸ்.எஸின் ஆணவப் போக்கு தொடர்கிறது. மீண்டும் தமிழ்த் திரையுலகின் இரண்டு படங்களை நிறுத்தி, அவர்கள் கட்டுப்படுத்த முயல்கிறார்கள். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளைப் போலவே தணிக்கை வாரியமும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கட்சி வேறுபாடு பார்க்காமல் தமிழ்நாடு அதிர்த்து நிற்க வேண்டும்.
கட்டுப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடையும்
பொங்கலுக்கு வெளியாகவுள்ள இரண்டு முக்கியமான படங்களையும் தமிழ்நாடு அரசியலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அமித் ஷா தடுத்து நிறுத்துவதை நாம் எதிர்த்து நிற்க வேண்டும். குரல் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு தமிழரும் பாஜகவை வேரோடு அழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக வேரூன்ற முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். கலையையும் தமிழையும் பிரிக்க முடியாது. அதைக் கட்டுப்படுத்த நினைப்பது தோல்வியில்தான் முடியும். மோடியும், அமித் ஷாவும் தொடர்ந்து இப்படிப்பட்ட தவறுகளை இழைத்து இழைத்து தமிழ்நாட்டிலிருந்து மிக தூரம் செல்லவிருக்கிறார்கள்” என்று பேசியுள்ளார்.
Congress MP Manickam Thakur has said that Modi and Amit Shah's attempts to control the Tamil art industry will only end in failure.