தமிழ்நாடு

மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்குத் தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்!

நெருக்கடியான நேரத்தில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம்பெற்றார் மன்மோகன் சிங்.

ராம் அப்பண்ணசாமி

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்குத் தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் உருவப்படத்தை சென்னை காமராஜர் அரங்கில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்கோளாரால் கடந்த டிசம்பர் 14-ல் சென்னையில் காலமானார். இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் 26-ல் தில்லியில் காலமானார்.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று (ஜன.7) மன்மோகன் சிங் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நாள் முழுவதும் சட்டப்பேரவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு.

இதன்பிறகு, சென்னை காமராஜர் அரங்கத்தில் வைத்து மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரின் படத்தைத் திறந்துவைத்துப் புகழஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். படத்திறப்பு நிகழ்வில் பேசிய ஸ்டாலின்,

`மன்மோகன் சிங்கும், ஈவிகேஎஸ் இளங்கோவனும் காங்கிரஸின் தூண்களாக விளங்கியவர்கள். நெருக்கடியான நேரத்தில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம்பெற்றார் மன்மோகன் சிங். அவரது ஆட்சிக்காலத்தில்தான் மிக அதிக அளவில் தமிழர்கள் மத்திய அமைச்சர்களாகக் கோலோச்சினார்கள். தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் கிடைத்தன’ என்றார்.