தமிழ்நாடு

சம்பந்தப்பட்ட தலைவர்கள் பேசிக்கொள்வார்கள்: கூட்டணி பற்றி அண்ணாமலை! | Annamalai

"எல்லோரும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரே புள்ளியில் இணைந்துள்ளோம்."

கிழக்கு நியூஸ்

அதிமுக - பாஜக கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் பேசிக்கொள்வார்கள் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணியில், கூட்டணி ஆட்சி அமையுமா அல்லது கூட்டணியாக ஆட்சியை அமைக்குமா என்ற நெருடல் தொடக்கம் முதலே இருந்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளிக்கும் பேட்டிகளில் கூட்டணி ஆட்சி என்று கூறி வருகிறார். கூட்டணியாக ஆட்சியமைப்போம் என்பதையே அமித் ஷா கூறி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தினார். மேலும் தான் எடுப்பதே இறுதி முடிவு என்றும் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 16 அன்று கூறினார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி பேசிய மறுநாளான ஜூலை 19 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "என் தலைவர் அமித் ஷா சொல்வதைத் தான் நான் கேட்டாக வேண்டும். அவர் ஒருமுறை அல்ல, பல முறை மிகத் தெளிவாகக் கூறிய பிறகு, ஒரு தொண்டனாக என்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டு, கூட்டணி ஆட்சி இல்லை என்று நான் கூறினால் இந்தக் கட்சியில் நான் தொண்டனாக இருப்பதற்கு எனக்குத் தகுதியில்லை என்று அர்த்தம்" என்று பேசியது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தலைவர்கள் பேசிக்கொள்வார்கள் என்று கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

"அதிமுக - பாஜக கூட்டணியில் சர்ச்சை ஒன்றும் இல்லை. அனைத்து கருத்துகளும் கூறப்பட்டுவிட்டன. எல்லோருடைய கருத்துகளும் பொதுவெளியில் உள்ளன. இதில் சர்ச்சையெல்லாம் எதுவும் இல்லை. எல்லோரும் ஒரே புள்ளியில் இணைந்துள்ளோம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரே புள்ளியில் இணைந்துள்ளோம். அது எப்படி இருக்க வேண்டும், வரவேண்டிய காலத்தில் எப்படி இருக்க வேண்டும், தேர்தலுக்கு முன்பு எப்படி இருக்க வேண்டும், தேர்தலுக்குப் பிறகு எப்படி இருக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் பேசுவார்கள்.

நான் இரு நாள்களுக்கு முன் பேசியது நம் கட்சியின் தலைவர் என்ன பேசியிருக்கிறார் என்பதைப் பற்றி தான். இதில் சர்ச்சையோ, சண்டையோ, எந்தக் குழப்பமோ இல்லை. எங்களைப் பொறுத்தவரை திமுக அகற்றப்பட வேண்டும் என்கிற விஷயத்தில் ஒன்றாக இருக்கும்போது, குழப்பம் எங்கிருந்து வரும்.

தங்களுடைய கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று தான் எல்லோரு கட்சி நடத்துகிறார்கள். அதுதானே உண்மை. தற்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அறிவித்துள்ளோம்.

2026-ல் யார் தலைமையிலான கூட்டணி, கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என எல்லோரையும் அறிவித்துள்ளோம். இது 2026-க்கு மிகச் சிறப்பாகப் பொருந்தும். இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என எல்லோரும் ஒன்றாக இணைந்து இதை அறிவித்துள்ளார்கள். எனவே, 2026-ஐ பொறுத்தவரை எந்தக் குழப்பமும் இல்லை.

அதே நேரத்தில் திமுகவை அகற்ற வேண்டும் என்கிற ஒற்றை இலக்கில் இருக்கும்போது, குழப்பமும் இருப்பதாகப் பார்க்கவில்லை.

இதில் குறிப்பாக இன்னொரு பக்கத்தில் காங்கிரஸ், கர்மவீரர் காமராஜரைக் கேவலப்படுத்திய பிறகு, கூட்டணியில் இருக்கலாமா வேண்டாமா என ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். திருமாவளவன் நடத்தும் அரசியல் மாநாட்டுக்கு அவருக்கே அனுமதி இல்லை. இது கொடுமை. கொடி நடுவதற்கு அனுமதி இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அதே பிரச்னை தான். அவர்களும் இன்று அரசை விமர்சித்துக்கொண்டே கூட்டணியில் இருக்கிறார்கள். அதுபோன்ற குழப்பங்கள் எல்லாம் இந்தக் கூட்டணியில் எதுவும் இல்லை" என்றார் அண்ணாமலை.

Annamalai | Tamil Nadu BJP | ADMK | ADMK Alliance | ADMK - BJP Alliance | NDA Alliance | Edappadi Palaniswami