கோப்புப்படம் 
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி அழைப்பை ஏற்க மறுத்த கம்யூனிஸ்ட், விசிக! | Edappadi Palaniswami

"கடந்த வாரம் கம்யூனிஸ்ட்களையே காணோம் என்றார், இந்த வாரம் அழைக்கிறார்."

கிழக்கு நியூஸ்

அதிமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்க மறுப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தெரிவித்துள்ளன.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடந்த ஜூலை 7 முதல் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

ஜூலை 16 அன்று சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோயில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். சிதம்பரத்தில் பேசும்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளை வெளிப்படையாகக் கூட்டணிக்கு அழைத்தார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி பேசியது

"ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளுக்கே வேட்டு வைக்கிறார். விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு. அனுமதி கொடுக்கப்படவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருச்சியில் ஒரு மாநாடு நடத்த அனுமதி கேட்டது. அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடுக்கம்பத்தை நட முடியாது என மறுக்கிறார்கள்.

இவ்வளவு அசிங்கப்பட்ட பிறகுமா அந்தக் கூட்டணியில் இருக்க வேண்டும். இவ்வளவு அசிங்கப்பட்ட பிறகுமா அந்தக் கூட்டணியில் தொடர வேண்டும். சிந்தித்துப் பாருங்கள். அதிமுகவைப் பொறுத்தவரை எங்களுடைய கூட்டணியில் சேருகிறவர்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிற கட்சி அதிமுக. கூட்டணி என்பது அந்தச் சூழ்நிலைக்குத் தக்கவாறு அமைப்பது. இன்று எல்லாக் கட்சியும் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுகின்றன" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி அழைப்பை ஏற்க மறுப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது

"விடுதலைச் சிறுத்தைகள் மீது ஒரு சந்தேகத்தை எழுப்பினால், திமுக கூட்டணிக்குள் ஒரு குழப்பம் உண்டாகும். அதன் மூலமாக ஒரு விரிசலை ஏற்படுத்த முடியும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. நீங்கள் ஏன் 4 தொகுதிகளுக்கும் 6 தொகுதிகளுக்கும் கூட்டணிக்குச் செல்கிறீர்கள், இதுபோதுமா? என்று திடீர் கரிசனம் இன்று பலருக்கு வந்துள்ளது.

இந்தக் கட்சி வளரவே கூடாது என்று நினைத்தவர்களெல்லாம், ஏன் நீங்கள் கூட்டணியில் 4 தொகுதிகளையும் 6 தொகுதிகளையும் வாங்குகிறீர்கள் எனப் பேசுகிறார்கள். அவர்களுடைய நோக்கம் எங்களுடைய வளர்ச்சி அல்ல, எங்களுடைய நலன் அல்ல. எங்களுடைய உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, திமுக மீது எங்களுக்கு ஒரு வெறுப்பு என்று நினைக்கிறார்கள்.

திமுக மட்டுமே பாதுகாப்பு அரண் என்ற அடிப்படையில் பேசவில்லை. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, திமுக தலைமையிலான கூட்டணி, விசிகவும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி என எல்லாம் சேர்ந்து தான் பாதுகாப்பு அரண் என்று சொல்கிறேன். பாஜக என்கிற மதவாத சக்திகளை எதிர்கொள்வதற்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஒரு பாதுகாப்பு அரண். அந்தக் கூட்டணியை உருவாக்கியதில், அதைப் பாதுகாப்பதில் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் பங்கு உள்ளது. விசிகவுக்கும் பங்கு உள்ளது. இதன் அடிப்படையில் தான் இந்தக் கருத்தைப் பேசுகிறோம்" என்றார் தொல். திருமாவளவன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது

"எடப்பாடி பழனிசாமி காலையில் ஒரு பேச்சு, அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பேச்சு, அதற்கு நேர்மாறாக இப்போது பாஜகவுடன் கூட்டணி.

கடந்த வாரம் கம்யூனிஸ்ட்களையே காணோம் என்றார், இந்த வாரம் அழைக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கு அவர் விரிப்பது ரத்தினக் கம்பளம் அல்ல. வஞ்சக வலை என்பதை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம்.

ஆர்எஸ்எஸ் எனும் புதைக் குழிக்குள் விழுந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பது அதிமுக தான்" என்று பெ. சண்முகம் பதிவிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியதாவது

"எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு நல்ல நகைச்சுவையைத் தெரிவித்திருக்கிறார். 2025-ம் ஆண்டில் மிகச் சிறந்த நகைச்சுவை என்பது நேற்று சிதம்பரம் கூட்டத்தில் அவர் பேசியது தான்.

தமிழகத்தை மீட்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்து கோவையில் பிரசாரத்தைத் தொடங்கினார். தமிழகத்தை மீட்போம் என்கிற முழக்கமே, இந்திய கம்யூனிஸ்ட் சென்ற தேர்தலில் சொன்னது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்ததால், தமிழகம் ஒட்டுமொத்தமாக பாஜகவால் கபளீகரம் செய்யப்படுகிறது. ஆகவே, தமிழகத்தை மீட்க வேண்டும் என்கிற இந்த அரசியல் முழக்கம் சென்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வைத்த முழக்கம். இந்த முழக்கத்தை தான் இரவலாகப் பெற்றுக்கொண்டு, பழனிசாமி தற்போது பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்.

அவர் கோவையில் பேசும்போது, கம்யூனிஸ்டுகளே இல்லை அவர்களுக்கு முகவரியே இல்லை, அவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்று கோவையில் பேசினார். ஒரு வார இடைவெளியில் என்ன ஞானஸ்தானம் பெற்றார் என்று தெரியவில்லை. ஒருவேளை சிதம்பரம் வந்ததால், நடராஜரிடம் ஞானஸ்தானம் பெற்று கூறினாரா என்று தெரியவில்லை. கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் எங்களுடைய அணிக்கு வர வேண்டும் என்றிருக்கிறார். கோவையில் கம்யூனிஸ்ட் கட்சிகளே இல்லை என்கிறார். சிதம்பரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்களுடைய அணிக்கு வர வேண்டும் என்றிருக்கிறார்.

இதுவொரு நல்ல நகைச்சுவை. 2025-ல் மிகச் சிறந்த நகைச்சுவை நேற்று எடப்பாடி பழனிசாமி சொன்னது தான். இவர்கள் எங்களுடைய அணிக்கு வந்தால், ரத்தினக் கம்பளம் விரித்து நாங்கள் வரவேற்போம் என்றிருக்கிறார்.

ஏற்கெனவே இவர் சேர்ந்துள்ள அணி பாஜக. இது ரத்தினக் கம்பளம் அல்ல, ரத்தக் கறை படிந்த கம்பளம். ரத்தக் கறை படிந்த கம்பளத்தில் எடப்பாடி பழனிசாமி ஆபத்தை உணராமல் அல்லது ஆபத்தை உணர்ந்தும் தனக்கு நேர்ந்த நெருக்கடியின் காரணமாக பயணம் செய்கிறார்.

அவ்வாறு பயணம் செய்கிறவர் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் வர வேண்டும் என அழைப்பு விடுத்திருப்பது நகைச்சுவைக்கு உரியது" என்றார் முத்தரசன்.

Edappadi Palaniswami | ADMK | DMK |ADMK Alliance | DMK Alliance | Viduthalai Chiruthaigal Katchi | VCK | CPI | CPIM | Thirumavalavan | Mutharasan | Shanmugam