தமிழ்நாடு

தமிழக பாஜக கட்சிப் பணிகளைக் கவனிக்க ஹெச். ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு

ராம் அப்பண்ணசாமி

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ள நிலையில், தமிழக பாஜக கட்சிப் பணிகளைக் கவனிக்க அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மூன்று மாத கால உயர்படிப்பில் கலந்துகொள்ள கடந்த ஆகஸ்ட் 28-ல் சென்னையில் இருந்து லண்டனுக்குக் கிளம்பினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

மாநிலத் தலைவர் இல்லாததால், தமிழக பாஜக கட்சிப் பணிகளைக் கவனிக்க 6 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங்.

இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜாவும், குழு உறுப்பினர்களாக மாநில பாஜக துணைத் தலைவர்கள் எம். சக்கரவர்த்தி, கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர்கள் முருகானந்தம், ராம. சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அமைப்புக் குழுவுடன் தகுந்த ஆலோசனை மேற்கொண்டு கட்சி தொடர்பான முக்கிய முடிவுகளை ஒருங்கிணைப்புக் குழு எடுக்கும் எனவும், ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மண்டலவாரியாக கட்சிப் பணிகளை கவனிப்பார்கள் எனவும் பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.