தமிழ்நாடு

கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா

கோவையின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்த் குமார் கடந்த 2022-ல் பதவியேற்றுக் கொண்டார்

ராம் அப்பண்ணசாமி

திமுகவைச் சேர்ந்த கோவை மேயர் கல்பனா மற்றும் நெல்லை மேயர் சரவணன் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர்.

2022-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில், 96 வார்டுகளில் வெற்றி பெற்றது திமுக கூட்டணி. தனிப்பட்ட முறையில் 76 வார்டுகளைக் கைப்பற்றியது திமுக. இதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் கல்பனா ஆனந்த் குமார்.

மேலும் 2022-ல் நெல்லை மாநகராட்சியின் 55 வார்டுகளில், 50 வார்டுகளைக் கைப்பற்றியது திமுக கூட்டணி. இதனை அடுத்து பி.எம்.சரவணன் நெல்லை மாநகராட்சி மேயராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்பனா கோவை மேயராகப் பொறுப்பேற்ற பிறகு, மாநகராட்சி உறுப்பினர்களுடன் மோதல், மண்டலத் தலைவர்களுடன் வாக்குவாதம் என்று தொடர்ந்து கட்சிக்குள் எதிர்ப்புகளைச் சம்பாதித்தார். மேலும் பக்கத்துக்கு வீட்டுக்காரருடன் கல்பனா தகராறு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே போல, நெல்லை மேயர் சரவணனுக்கும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்களும், மோதல்களும் நடைபெற்று வந்தன. ஒரு கட்டத்தில் சரவணனுக்கு எதிராக மாநகராட்சியில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்ததால் அந்தப் பிரச்சனை தற்காலிமாக முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இன்று கோவை, நெல்லை மேயர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். புதிய மேயர்கள் அடுத்த சில நாட்களில் தேர்ந்தெடுக்கப்படலாம்.