படம்: https://twitter.com/annamalai_k
தமிழ்நாடு

ஆரத்திக்குப் பணம் கொடுத்தாரா அண்ணாமலை?: விசாரணைக்கு உத்தரவு

இது அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையின்போது நிகழ்ந்த சம்பவம் என சிலர் விடியோவின் கீழே குறிப்பிட்டுள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆரத்திக்குப் பணம் கொடுப்பதைப்போல விடியோ வைரலானதை தொடர்ந்து, இதுகுறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாகும்.

இந்த நிலையில், தனக்கு ஆரத்தி எடுக்கும் பெண் ஒருவருக்கு அண்ணாமலை பணம் கொடுப்பதுபோல ஒரு விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த விடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒருவர் கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரைக் குறிப்பிட்டு விடியோ பகிர்ந்துள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி, "பகிரப்பட்டுள்ள விடியோவை கவனத்துக்கு எடுத்துள்ளோம். விடியோவின் உண்மைத் தன்மை குறித்து சரிபார்க்க காவல் துறைக்கு விடியோ அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டார்.

இந்த விடியோவின் கீழே சிலர் இது அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையின்போது நிகழ்ந்த சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனினும், இது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் நிகழ்ந்த சம்பவமா இல்லையா என்பது குறித்து காவல் துறை தரப்பில் சரிபார்க்கப்படவுள்ளது.