தமிழ்நாடு

தொடர்ந்து உயரும் தேங்காய் விலை!

அண்மைக் காலமாக கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி பகுதியில் இருந்து தேங்காய் வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராம் அப்பண்ணசாமி

தேங்காய் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக, சில்லரை விற்பனையில் தேங்காயின் தொடர் விலை அதிகரிப்பால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக சமையலறைகளில் இடம்பெறும் அத்தியாவசிய மூலப் பொருட்களின் பட்டியலில் தேங்காய்க்கு மிக முக்கியமான இடமுள்ளது. தென் மாநிலங்களைப் பொறுத்தளவில் தமிழகமும், கேரளமும் தேங்காய் எண்ணெய் பயன்பாட்டில் முன்னணி இடத்தில் இருக்கின்றன.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் தேங்காயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தேங்காய் ரூ. 60 முதல் ரூ. 70 வரையும், அதுவே சில்லறை விற்பனையில் ரூ. 80 வரையும் விற்கப்படுகிறது.

பொதுவாகவே தமிழகத்தைப் பொறுத்தளவில் கோவை, கன்னியாகுமரி மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் தேங்காய் உற்பத்தி அதிகளவில் நடைபெறுகின்றன. ஆனால் கடந்த 2018-ல் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பால் கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் சரிந்தன.

இதனால் கடந்த 4-5 ஆண்டுகளாக அந்த பகுதியில் இருந்து தேங்காய் வரத்து பெருமளவில் குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல அண்மைக் காலமாக கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சியில் இருந்தும் சென்னை கோயம்பேட்டிற்கு தேங்காய் வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக, கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ தேங்காயின் விலை ரூ. 10 வரை உயர்ந்துள்ளது. வருங்காலத்தில் தேங்காயின் விலை மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.