தமது வெளிநாட்டுப் பயணம் குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் தள்ளுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் லண்டனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் ஜெர்மனியிலிருந்து இதுவரை ரூ.7,020 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஜெர்மனியில் இருந்து லண்டன் சென்றபோது விமானத்தில் இருந்தபடி கடிதத்தை எழுதுகிறேன் எனக் கடிதத்தைத் தொடங்கிய முதல்வர், ”ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்குடன் திராவிட மடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது. தமிழ்நாடு சீரான வளர்ச்சி பெறும் வகையில் முதலீடுகளை ஈர்க்க ஆகஸ்ட் 30-ம் தேதி சுற்றுப் பயணத்தைத் தொடங்கினேன்.” என்று தமது பயணத்தின் நோக்கத்தை விரிவாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளார்.
”வின்பாஸ்ட் உடன் ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஜெர்மனியில் இருந்தபோது சென்னையில் பெய்த மழை விவரங்கள், பாதிப்பை உதயநிதியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். எந்த நாட்டில் எந்த நகரில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் செல்கிறது” என்று தமது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்பைப் பற்றியும், ஜெர்மனியின் ரைன் நதிக்கரை ஓரமாக நடைபயிற்சி மேற்கொண்ட அனுபவங்களையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், அரசியல் காரணங்களுக்காகவே தமது வெளிநாட்டுப் பயணங்கள் விமர்சிக்கப்படுகின்றன என்று சுட்டிக்காடிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவற்றைப் புறங்கையால் ஒத்துக்கிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளையும் ஈர்க்க உழைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
M K Stalin | DMK | CM Stalin | Stalin writes Letter | Stalin Germany Visit | Stalin in London | Investments for TamilNadu