கேரளாவில் வரும் டிச.12-ல் நடைபெறும், வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
கேரளாவின் கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடப்பதற்கு அமலில் இருந்த தடையை நீக்கும் வகையில் கடந்த 1924-ல் தொடங்கிய போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார் தந்தை பெரியார். மாதக்கணக்கில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் முடிவில் ஓடுக்கப்பட்ட மக்களுக்கான தடை விலக்கப்பட்டது.
இந்நிலையில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை ஒட்டி கடந்த 2023-ல் தொடங்கி தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கடந்த டிச.28-ல் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழாவில், `வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலரை' முதல்வர் ஸ்டாலின் வெளியிட, கேரளா முதல்வர் பினராயி விஜயன் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் வரும் டிச.12-ல் கேரளாவின் வைக்கத்தில் நடைபெறும், வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். வைக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகத்தை அவர் திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் தமிழக தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் வரவேற்புரை ஆற்றுகிறார். இதனைத் தொடர்ந்து முன்னிலையுரை ஆற்றுகிறார் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி. மேலும், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, மு.பெ. சாமிநாதன் ஆகியோரும் இதில் கலந்துகொள்கின்றனர்.