சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 20) நடந்த திமுக இளைஞரணியின் 45-வது ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், `எந்தப் பொறுப்புக்கு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிடமாட்டேன்’ என்று தெரிவித்தார்.
இந்த விழாவில், `முதலமைச்சருக்குத் துணையாக நான் வர வேண்டும் என்று இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பத்திரிக்கைகளில் வரும் கிசுகிசு, வதந்திகளை படித்துவிட்டு வந்து துண்டு போடுவோம் என்ற அடிப்படையில் (பலரும்) பேசியிருக்கிறீர்கள். எல்லா அமைச்சர்களுமே எங்கள் முதலமைச்சருக்குத் துணையாக இருப்போம்.
எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் என் மனதுக்கு மிக மிக நெருங்கிய பொறுப்பு திமுகவின் இளைஞரணி செயலாளர் என்று பொறுப்புதான். எனவே எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிடமாட்டேன். நாம் முன்னெடுக்க வேண்டிய பணிகள் ஏராளம்’ என்று பேசினார் உதயநிதி.
கடந்த சில தினங்களாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனவும், அமைச்சர் உதயநிதி துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் எனவும் தகவல்கள் பரவி வந்தன. இதைக் குறிப்பிட்டு உதயநிதியிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, `அது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்’ என்றார்.
மேலும், `நீட் தேர்வு தொடர்பாகப் பல முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறீர்கள், உச்சநீதிமன்றத்தில் அது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. ஏன் அந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தலையிடவில்லை’ என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, `ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். சட்டப்படி போராட்டம் மேற்கொண்டு வருகிறோம், என்றைக்கும் நீட் தேர்வை எதிர்ப்போம்’ என்றார் உதயநிதி ஸ்டாலின்.