ANI
தமிழ்நாடு

வளர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

கடைசியாக, கடந்த 2017-18 நிதியாண்டில் 8.59 சதவீத வளர்ச்சியை எட்டியதே தமிழகத்தின் அதிகபட்ச சாதனையாக இருந்தது.

ராம் அப்பண்ணசாமி

நாட்டிலேயே மிக அதிகமான வளர்ச்சி விகிதத்தை தமிழகம் பதிவு செய்துள்ளதை ஒட்டி, அது தொடர்பாக பதிவிட்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் வலைதளத்தில் வெளியாகியுள்ள தரவுகளின்படி, கடந்த 2023-24 நிதியாண்டில், ரூ. 15.71 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு, 2024-25 நிதியாண்டில் ரூ. 17.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இது 9.69 சதவீத வளர்ச்சியாகும். கடைசியாக, கடந்த 2017-18 நிதியாண்டில் 8.59 சதவீத வளர்ச்சியை எட்டியதே தமிழகத்தின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், சேவைத்துறை 53 சதவீத பங்களிப்பையும், உற்பத்தித்துறை 37 சதவீத பங்களிப்பையும், வேளாண் துறை 10 சதவீத பங்களிப்பையும் வழங்கியுள்ளன. மேலும், கடந்த 2021-22 நிதியாண்டில் இருந்து, தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் தோராயமாக 8 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருந்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இன்று (ஏப்ரல் 5) வெளியிட்ட பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,

`9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது!

அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை நாம் எட்டியுள்ளோம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது.

அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது.

ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்!’ என்றார்.