தமிழ்நாடு

புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

இதை அரசுக்கான செலவாகக் கருதாமல், பெண் குழந்தைகளின் கல்விக்கான மூலதனமாக நான் பார்க்கிறேன். மாணவிகளின் கல்விக்கு எந்தத் தடை வந்தாலும் அதை நான் உடைப்பேன்.

ராம் அப்பண்ணசாமி

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகள் பயனளிக்கும் வகையில், புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தைத் தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வித் திட்டம் எனப்படும் புதுப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்குப் பயனளிக்கும் வகையில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தை தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு,

`இந்த விழாவில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவிகளைப் பார்த்து ஒரு திராவிடியன் ஸ்டாக்காக நான் பெருமைப்படுகிறேன். இதற்கு நேரெதிராக இன்னொரு ஸ்டாக் உள்ளது. சாதி, மதத்தை வைத்து நம்மை பிரிக்கக்கூடிய ஸ்டாக். வளர்ச்சியைப் பற்றி யோசிக்காமல் வன்முறை எண்ணத்தைத் தூண்டிவிடக்கூடிய வன்மம் பிடித்த ஸ்டாக்.

பெண்கள் வீட்டில்தான் இருக்க வேண்டும், கடைசி வரை ஒருவரை சார்ந்து இருக்கவேண்டும் என மனுவான சிந்தனையை இந்தக் காலத்திலும் பேசும் எக்ஸ்பையரியான ஸ்டாக் அது. அப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பி, இன்று தமிழகப் பெண்கள் இந்தியாவிலேயே உயர்ந்த இடத்தில் இருக்கின்றீர்கள்.

மாணவிகளுக்கான ஊக்கத்தொகையாக ரூ. 590 கோடியே 66 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை அரசுக்கான செலவாகக் கருதாமல் ஒரு தந்தைக்குரிய கடமையாக, பெண் குழந்தைகளின் கல்விக்கான மூலதனமாக நான் பார்க்கிறேன். மாணவிகளின் கல்விக்கு எந்தத் தடை வந்தாலும் அதை நான் உடைப்பேன்.

பாரதி கண்ட கனவை புதுமைப்பெண் திட்டம் மூலம் திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ளது. உயர்கல்வி பயிலாத பெண்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்காமல் ஓயமாட்டோம்; மாணவிகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அனைத்தையும் செய்து தர நான் இருக்கிறேன்.’ என்றார்.