தனது ஐரோப்பிய பயணம் குறித்து விளக்கமளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வெளியிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 30 அன்று மாநிலத்திற்காக முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் லண்டனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளில் 7 நாள் சுற்றுப் பயணம் சென்ற அவர், கடந்த செப்டம்பர் 8 அன்று தமிழகம் திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழ்நாட்டிற்கு ரூ. 15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார்.
இந்நிலையில், தனது பயணம் பற்றி மக்களுடன் ஸ்டாலின் செயலியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதல்வர் விளக்கமளித்து காணொளியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது -
”முதலீட்டாளர்களை சந்திப்பைப் பொருத்தவரை, ஜெர்மனியில் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் நாம் எவ்வாறெல்லாம் கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கிறோம், எவ்வளவு படித்த, திறமையான இளைஞர்கள் இங்கு இருக்கிறார்கள். இங்கு படித்து வரும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தைத் தாண்டி எப்படி திறன் மேம்பாடு செய்கிறோம் என்பது பற்றி ஒரு விரிவான விளக்கப் படத்தைக் காட்டினோம். அதைப் பார்த்தவர்கள் தமிழ்நாட்டைப் பற்றி வியந்து பேசினார்கள். முதலீட்டாளர்களிடம் பேசும்போது, இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பெண்களுக்கு நாம் வேலைவாய்ப்பு கொடுத்திருப்பதை பெருமையோடு சொன்னார்கள். அதோடு, அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியைக் கொண்டு செல்வதையும், ஒரு துறையை மட்டும் மையப்படுத்தாமல், எல்லா துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, புதிதாக வளர்ந்து வரும் துறைகளிலும் கவனம் செலுத்துவதையும் அவர்கள் பெரிதும் பாராட்டிப் பேசினார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த மாற்றத்தையும் வளர்ச்சியையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கான தொலைநோக்குத் திட்டங்களைத்தான் இப்போது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தி வருகிறோம்” என்று பேசினார்.
தொடர்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்களைச் சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கும்போது,
”ஆக்ஸ்போர்ட், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பல்கலைக்கழகம். அங்கு பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில், தந்தை பெரியாருடைய படத்தைத் திறந்து வைத்து, ஐயாவைப் பற்றி பேசியபோது, மெய்சிலிர்த்துவிட்டதாகச் சொல்வார்கள், அப்படி இருந்தது அந்த அனுபவம். ஜெர்மனியிலும், லண்டனிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைச் சந்தித்தபோது, அவர்கள் சொன்னது, “இட ஒதுக்கீட்டில் படித்து முன்னேறியதால்தான் நாங்கள் வெளிநாடு வந்திருக்கிறோம். எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறை பட்டதாரி. தலைவர் கலைஞர் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்ததுதான் நான் இந்த அளவுக்கு முன்னேறக் காரணம். அரசுப் பள்ளிகளில் படித்து, இப்போது வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள், “நம்முடைய திராவிட மாடல் அரசு கொண்டு வந்த முழு உதவித்தொகையுடன் இங்கு இருக்கிறோம்” என்று சொன்னார்கள். இப்படி பல மறக்க முடியாத அனுபவங்களைக் கொண்டதாக என்னுடைய ஐரோப்பிய பயணம் இருந்தது. நான் இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டியது, அங்குள்ள மக்கள் பொது இடங்களில் எந்த அளவுக்கு சுய ஒழுக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்பதை கவனித்தேன். இந்த பொறுப்புணர்ச்சி இங்கேயும் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்.