கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன, புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டிட்வா’ புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு 540 கி.மீட்டர் தூரத்திலும், புதுச்சேரிக்கு 440 கி.மீட்டர் தெற்கு தென்கிழக்கு திசையிலும் தற்போது நிலைகொண்டுள்ளது. இது மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இதனால் தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் 29 மற்றும் 30 ஆகிய இரு நாள்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் காணொளிக் காட்சி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் நடத்தி வருகிறோம். நேற்று எனது தலைமையில் இது தொடர்பாக கூட்டத்தை கூட்டி எச்சரிக்கை விடுத்து, அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறோம்.
அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளோம். ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை உஷாராக கவனிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறோம். மின் கம்பிகள் அறுந்து விபத்து ஏற்பட்ட இடங்களில் கவனமாகக் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளோம். சென்னையிலும் அதிக மழைப் பொழிவு இருக்கும் என்று சொல்கின்றனர். எல்லா இடங்களிலும் முகாம்கள், உணவுப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் நிலைமையை கவனமாக கண்காணித்து வருகிறார்கள்.
டெல்டா மாவட்ட மக்கள் வஞ்சிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்கிறார். அவர் வஞ்சிக்காமல் இருந்தாலே போதும். அவர் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. அவருக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. புயலை எதிர்கொள்ள எல்லா வகையிலும் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது” என்றார்.
Chief Minister Stalin said that precautionary measures have been taken in the districts where a heavy rain warning has been issued and the Tamil Nadu government is prepared to face the cyclone.