தமிழ்நாடு

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை

ராம் அப்பண்ணசாமி

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

வயது மூப்பு காரணமாக கடந்த 7 ஆகஸ்ட் 2018-ல் மரணமடைந்தார் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இதை அடுத்து ஆகஸ்ட் 8-ல் அரசு மரியாதையுடன் சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார் கருணாநிதி.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளான இன்று (ஆகஸ்ட் 7) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருக்கும் கருணாநிதியின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

அதன் பிறகு அண்ணா சாலை வழியாக நடைப்பயணம் மேற்கொண்டு மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதியின் நினைவிடத்தில் அமைச்சர்கள் சகிதமாக மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதற்குப் பிறகு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தொகுத்த "கலைஞர் 100 கவிதைகள் 100" நூலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கீ. வீரமணி பெற்றுக் கொண்டார்.