சென்னை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தானியங்கி குடிநீர் இயந்திரங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 18) திறந்து வைத்தார்.
சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அதிகமாக மக்கள் கூடும் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், வணிகப் பகுதிகள், கடற்கரைகள் என முதற்கட்டமாக மொத்தம் 50 இடங்களில் கட்டணமில்லா திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை (Smart Water ATM) அமைத்துள்ளது.
இந்த தானியங்கி இயந்திரங்கள் மூலம், 1 லிட்டர் மற்றும் 150 மில்லி லிட்டர் அளவில் பொதுமக்கள் குடிநீரை எளிதாகப் பெரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பருவ நிலைகளிலும், 24 மணிநேரமும் இயங்கும் வகையில், ரூ. 6.04 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களை கண்காணிக்க சிசிடிவி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தானியங்கி குடிநீர் இயந்திரத்தின் இயக்கத்தை இன்று (ஜூன் 18) காலை 10 மணி அளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பிறகு அங்கிருந்தபடி மணலி, மாதவரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, அடையாறு, வளசரவாக்கம் என மாநகரின் பிற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரங்களின் இயக்கத்தை காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.