விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா அரங்கில் நவம்பர் 19 முதல் 21 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார். மேலும் இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கும் விழாவும் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் “கோவைக்கு வரும் பிரதமருக்கு தமிழ்நாட்டு உழவர்களின் சார்பில் நமது கோரிக்கைகள்” என்று தலைப்பிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அவரது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-
“இந்த ஆண்டு தமிழ்நாடு அமோகமான அறுவடையைப் பதிவு செய்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழையைக் கருத்தில் கொண்டு, பின்வரும் அவசர கோரிக்கைகளை நான் உங்களிடம் முன்வைக்கிறேன். உங்கள் கோவை வருகைக்கு முன்னதாக அவற்றை சாதகமாகப் பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
1) நடப்பு 2025 - 2026 காரீஃப் பருவத்தில் தமிழ்நாட்டுக்கான 16 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இலக்கை பருவத்திற்கான உண்மையான உற்பத்தி மற்றும் கொள்முதல் நிலைகளுக்கு ஏற்ப திருத்தியமைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
2) ஈரப்பதத்தை மதிப்பிடுவதற்காக மத்திய குழுக்கள் கடந்த அக்டோபர் 25 அன்று தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, ஈரப்பதத்தை 17% -ல் இருந்து 22% ஆகக் குறைப்பதற்கான உத்தரவுகள் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த உத்தரவுகளை உடனே பிறப்பிக்க வேண்டும்.
3) தற்போதுள்ள 25 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி தானியங்களின் எடை அளவை 50 கிலோவாக அதிகரிக்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் மாதிரி தொகுதி அளவை 10 மெட்ரிக் டன்னிலிருந்து 25 மெட்ரிக் டன்னாக அதிகரிக்க உத்தரவிட வேண்டும்.
தமிழ்நாட்டின் நெல் விவசயிகள் நலனுக்காக முன் வைக்கப்படும் இந்த அவசர கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பையும் இணைத்துள்ளார்.
Chief Minister Stalin has written a letter to Prime Minister Modi requesting that the moisture content for paddy procurement be increased to 22% for the welfare of farmers.