தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி

ராம் அப்பண்ணசாமி

சென்னை திரும்பிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை, விமான நிலையத்தில் சந்தித்தார் முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஜாமின் வழங்கப்பட்டு, 471 நாட்கள் கழித்து நேற்று (செப்.27) புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி. உச்ச நீதிமன்ற நிபந்தனையின்படி இன்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி அவர் கையெழுத்திட்டார்.

ஒரு நாள் பயணமாக நேற்று தில்லி புறப்பட்டுச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகள் தொடர்பான மனுவை அவரிடம் வழங்கினார். இதைத் தொடர்ந்து மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.

பிறகு டெல்லியில் உள்ள மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் இல்லத்துக்குச் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் முதல்வர் ஸ்டாலின்.

இதனைத் தொடர்ந்து தில்லியில் இருந்து கிளம்பி இரவு 8 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின். சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் செந்தில் பாலாஜி.