தமிழ்நாடு

கச்சத்தீவை மீட்க தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்!

இலங்கை செல்லும் பிரதமர் தமிழ்நாட்டுப் பிரச்னைக்கு நிரந்தத் தீர்வு காணவும், கச்சத்தீவை மீட்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கும் பேச்சுவார்த்தை நடத்திடவேண்டும்.

ராம் அப்பண்ணசாமி

இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 2) கூறியதாவது,

`தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்திலே நான் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது.

அங்கே எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள்தான் என்பதை மத்திய அரசு அடிக்கடி மறந்துவிடுகிற காரணத்தால் நான் மீண்டும் மீண்டும் அவர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் என்பதை அழுத்தமாக சொல்லவேண்டியதாக இருக்கிறது.

கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது? கடல் கடந்துபோன தமிழனின் கண்ணீரால் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். கடல் நீர் இன்று ஏன் சிவப்பாக இருக்கிறது? தமிழ்நாட்டு மீனவர் சிந்திய ரத்தத்தால் என்று சொல்லவேண்டிய கவலையான நிலைமை உள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்படமாட்டார் என்று 2014 மக்களவை தேர்தலுக்கு முன்பு நரேந்திர மோடி கூறினார். ஆனால் இந்த தாக்குதல் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, ஆனாலும் தமிழ்நாட்டு மீனவர்களின் நிலை மாறவில்லை.

பாரம்பரிய மீன் பிடி உரிமை கொண்ட நம் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது தொடர்ந்து சிறைபிடிக்கப்படுகிறார்கள். கடந்த 2024-ல் மட்டும் 530 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது கண்டிக்கத்தக்கது. இதனை மத்திய பாஜக அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.

இந்த பிரச்னைக்குத் தீர்வு காண்பது சவாலாக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். இதில் என்ன சவால் இருக்க முடியும் என்பது தெரியவில்லை. பிரதமரை நேரில் சந்திக்கும்போதெல்லாம் இது குறித்து வலியுறுத்திக் கூறியிருக்கிறேன்.

இது போன்ற சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவு மீட்பே மிகச் சரியான வழி என்பதை இம்மாமன்றத்தின் வாயிலாக மீண்டும் வலியுறுத்துகிறேன். கச்சத்தீவை மாநில அரசுதான் இலங்கைக்கு அளித்தது என்பதைப்போல ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகிவிட்டது.

கச்சத்தீவைப் பொறுத்தவரை அந்த தீவைக் கொடுத்து ஒப்பந்தம் போட்டபோதே முதல்வராக இருந்த கலைஞர் கடுமையாக எதிர்த்தார். அன்றைய திமுக எம்.பி.க்கள் இதை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தார்கள். அதையும் மீறி கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதும் கச்சத்தீவைத் திரும்பப்பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

ஆனால் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசு இன்று வரை கச்சத்தீவு மீட்பு குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நான் வேதனையுடன் இங்கே குறிப்பிடுகிறேன்.

விரைவில் இலங்கை செல்லும் பிரதமர் தமிழ்நாட்டுப் பிரச்னைக்கு நிரந்தத் தீர்வு காணவும், கச்சத்தீவை மீட்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கும் பேச்சுவார்த்தை நடத்திடவேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை விரும்புகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

`தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்துவித இன்னல்களைப் போக்கிடவும் கச்சத்தீவைத் திரும்பப்பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.

இதனைக் கருத்தில்கொண்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப்பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்றும், அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் அந்நாட்டு அரசுடன் பேசி இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக்கொண்டுவர வேண்டும் என்றும் இப்பேரவை வலியுறுத்துகிறது’ என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.