சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஜன.4) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பொம்மையாபுரத்தில் பாலாஜி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இதில் 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இன்று (ஜன.4) காலை இங்கு வெடிமருந்து கலக்கும் அறையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் வேல்முருகன், நாகராஜ், கண்ணன், காமராஜ், மீனாட்சி சுந்தரம், சிவக்குமார் உள்ளிட்ட 6 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தால் படுகாயமடைந்த முகமது சுதின் என்பவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 4 லட்சமும், சிகிச்சைப் பெற்று வருபவருக்கு ரூ. 1 லட்சமும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
வெடி விபத்திற்குப் பிறகு தலைமறைவான இந்த பட்டாசு ஆலையின் ஃபோர் மேன் பாண்டியராஜ் மற்றும் பிரகாஷ் ஆகியோரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.