தமிழ்நாடு

எதையும் ஏஐ-யைக் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனம் கூடாது: முதல்வர் அறிவுரை | MK Stalin |

தொழில்நுட்பத்துக்கும் மனித சிந்தனைக்குமான வேறுபாட்டை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்றும் பேச்சு...

கிழக்கு நியூஸ்

எதற்கெடுத்தாலும் ஏஐயை கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனம் மாணவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,

"ஆசிரியர் என்பவர் பாடப் புத்தகத்தில் இருக்கும் பாடங்களை மட்டும் சொல்லிக் கொடுப்பவர் இல்லை. தன்னுடைய கல்வியையும் அனுபவத்தையும் சேர்த்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, எதிர்காலத்தில் நல்லொழுக்கமிக்க, நாளைய சமுதாயத்தை உருவாக்குபவர்கள். ஒவ்வொரு முறை நீங்கள் வகுப்பறைக்குள் நுழையும் போதும், நினைவில் கொள்ள வேண்டியது, உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறவர்கள் பாடம் கற்கும் மாணவர்கள் மட்டுமல்ல; எதிர்கால மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் அரசியல் தலைவர்கள் என்று நீங்கள் உணர வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை உங்களுக்கு நாம் சொல்லிக் கொடுக்கப் போகிறோம் என்ற பொறுப்புணர்வுதான் உங்களிடம் மேலோங்கி இருக்க வேண்டும்.

இத்தனை ஆண்டு காலமாக நீங்கள் மாணவர்களாக இருந்து, கல்வியைக் கற்று, சமூகத்தை உள்வாங்கி பெற்றிருக்கக்கூடிய அனுபவத்தை, அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கடத்தி, அந்த சமூகத்துக்கு ஒளியேற்றி வைக்கப் போகிறீர்கள். இன்றைய காலகட்டத்தில், பாடம் எடுப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், நீங்கள் படித்த காலத்தில், நாங்கள் படித்த காலத்தில், பரந்து பட்ட வாசிப்புக்கான தேடலுக்கு ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருந்தது. ஆனால், இன்று அப்படி இல்லை. அறிவியல், வரலாறு, கணிதம் தொடங்கி எந்தப் பாடமாக இருந்தாலும், அதன் ஆழத்தை மிக எளிதாக கற்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. ஆனால், இதில் ஒரு விஷயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

இவை எல்லாமே தகவல்கள் மட்டுமே. இந்தத் தகவல்களை மாணவர்களின் அறிவாற்றலுக்குக் கொண்டு சென்று, அவர்களின் சிந்தனையைத் தூண்டி, அவர்களின் அறிவை மேம்படுத்த வேண்டிய பெரும்பணி உங்களிடம்தான் இருக்கிறது. ஏனெனில், அந்த அளவுக்கு அறிவார்ந்த தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன; அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், தேவையற்ற குப்பைகளும் இருக்கின்றன. அதற்காக, நாம் தொழில்நுட்ப வளர்ச்சியைக் குறை சொல்ல முடியாது. நாம்தான் நம் குழந்தைகளுக்கு, நம் மாணவர்களுக்கு சரியானவற்றை அடையாளம் காட்ட வேண்டும். எதற்கெடுத்தாலும் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருக்கும் தலைமுறையாக நம் மாணவர்கள் மாறிவிடக் கூடாது. ”எதுவாக இருந்தாலும், கூகிளிடம் கேட்டுக்கலாம், ஏஐயிடம் கேட்டுக்கலாம்” என்ற மெத்தனம் வந்துவிடக் கூடாது. தொழில்நுட்பத்துக்கும் மனித சிந்தனைக்குமான வேறுபாட்டை உணர்த்த வேண்டும்.

அறத்தின் வலிமையும், நேர்மையின் தேவையும் மாணவர்களுக்கு நீங்கள்தான் கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களைக் கடந்து, இலக்கியங்களை, பொது அறிவு தகவல்களை, சமூக ஒழுக்கத்தை, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை, காலநிலை மாற்றம் குறித்த தெளிவையைப் பற்றி எல்லாம் நீங்கள் உரையாடி புரிய வைக்க வேண்டும். “என்னடா, நம் டீச்சர் போர் அடிக்கிறாங்க” என்று அவர்கள் நினைத்துவிடக் கூடாது. மாணவர்களிடம் நீங்கள் ஒரு நண்பராகப் பழக வேண்டும். யூடியூபில் புதுமையாகச் சொல்லிக் கொடுக்கப்படும் காணொளிகள் வருகின்றன. அந்த மாதிரி, நீங்களும் புது புது முயற்சிகளை எடுக்கலாம்.

இதற்கெல்லாம் காரணம், எங்கள் ஆசிரியர்தான் என்று மாணவர்கள் சொல்வதுதான் உங்களுக்கான பெரிய பாராட்டு. இன்று நீங்கள் விதைக்கப் போகும் நல்ல விதைகள்தான் நாளை நம் சமூகத்தில் முளைக்கப் போகின்றன. இன்னொரு முக்கியமான விஷயத்தை நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு எந்த அளவுக்கு அறிவாற்றல் முக்கியமோ, அதே அளவுக்கு உடல்நலமும், மனநலமும் முக்கியம். மாணவர்களை அழுத்தக் கூடாது. நாம் அன்பாக, பக்குவமாகச் சொன்னால், பசங்க நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

சில குழந்தைகள் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பார்கள்; சிலர் கலகலப்பாகப் பேசுவார்கள்; சிலர் படித்த குடும்பங்களில் இருந்து வந்திருப்பார்கள்; சிலருடைய குடும்பங்கள் இப்போதுதான் கல்வி கற்கத் தொடங்கியிருப்பார்கள். எல்லோர் வீட்டிலும் ஒரே சூழல் இருக்குமென்று அவசியமில்லை. அதனால், எல்லோரையும் ஒரே அளவுகோலுடனோ, முன்முடிவோடோ அணுகக் கூடாது. அவர்களுடைய குடும்ப சூழல் என்ன, அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகள் என்னவென்று கவனித்து, அவர்களை வளர்த்து வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஏனெனில், நீங்கள்தான் அந்தக் குழந்தைகளுக்கான இரண்டாவது பெற்றோர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இன்றைய சூழலில், பெற்றோர்களைவிட ஆசிரியர்கள்தான் குழந்தைகளுடன் அதிக நேரம் இருக்கிறீர்கள்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டு கல்வி சூழலை மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று நம் அரசு பள்ளி மாணவர்கள் நம் பெருமையின் அடையாளமாக உயர்ந்து வருகிறார்கள். பள்ளிகளின் உட்கட்டமைப்பும், தரமும் உயர்ந்திருக்கிறது. அவர்களுக்கு சமூக அறிவும், உலக அறிமுகமும் கிடைக்க வேண்டும் என்று வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறோம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி, பொருளாதார சூழல் காரணமாகத் தடைபடக் கூடாது என்று புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இதற்கெல்லாம் மேலாக, அறிவு பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்கள் பசியோடு இருக்கக் கூடாது என்று, சூடான, சுவையான, சத்தான காலை உணவை வழங்குகிறோம்.

ஆசிரியர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்ள அத்தனை வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறோம். இவை எல்லாவற்றையும் பயன்படுத்தி, மாணவர்களை வளர்த்து வையுங்கள் என்று அன்போடு அழைக்கிறேன். கல்வி தொடர்பாக நீங்கள் செய்யப்போகும் பணிகளைத் தாண்டி, மாணவர்களுக்கு சாதிய உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனங்கள் தலையெடுக்காமல் நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். சமத்துவம் மற்றும் சமூக நீதியின் தேவையைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். மாணவர்களுக்கு நல்ல ரோல் மாடல்களை அறிமுகப்படுத்துங்கள். நீங்களே ஒரு ரோல் மாடலாக இருங்கள். பொது உணர்வைக் கற்றுக் கொடுங்கள். மாணவர்களிடம் அடிக்கடி மனம் விட்டுப் பேசுங்கள். நூலகங்களையும், வாசிப்பு பழக்கத்தையும் அறிமுகப்படுத்துங்கள். அதற்கு நீங்கள் முதலில் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். மாணவர்கள் எல்லாவற்றையும் “ஏன், எதற்கு, எப்படி” என்று பகுத்தறிவு உணர்வோடு அணுகும் தலைமுறையாக உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது”

இவ்வாறு பேசினார்.