நாட்டில் போதைப் பழக்கத்தை ஒழிக்க மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ, திருச்சியில் இருந்து மதுரை வரை சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். அதனைத் திருச்சியில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் பேசியதாவது:-
“போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதன் பாதிப்புகளை உணர்ந்து அந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். உடனிருப்பவர்கள் அவர்களைத் திருத்த வேண்டும். போதைப்பொருள் பழக்கம் என்பது மிகப்பெரிய இணைப்பு. அந்த இணைப்புகளை அழிக்க மாநில அரசுகளும் மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.
மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்
ஏராளமான போதைப்பொருள்கள் நாட்டுக்குள் வருகின்றன. அவற்றில் அதிகமான பொருள்கள் எந்தெந்த துறைமுகங்கள் வழியாக நாட்டுக்குள் நுழைகின்றன என்பதை நாம் செய்திகளின் மூலம் தெரிந்து கொள்கிறோம். இந்த நுழைவு வாயில்களை அடைக்க வேண்டும். நாட்டின் எல்லைக்குள் போதைப் பொருள்கள் நுழைவதையும் மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படுவதையும் மத்திய அரசின் முகமைகள் தீவிரமாகக் கண்காணித்துத் தடுக்க வேண்டும். அதற்கு அனைத்து மாநில அரசுகளும் தேவையான ஒத்துழைப்புகளைக் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கை
கடந்த சில மாதங்களில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இந்தக் கடத்தலில் தொடர்புடையவர்கள் மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, ஹரியானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும் சில வழக்குகளில் நைஜிரியா, செனகல் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகளாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட இணைப்புகளை ஒழிக்க நாம் அனைவரும் கைகோக்க வேண்டும். போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசுடனும் மற்ற மாநில அரசுடனும் இணைந்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என்பதைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
கலைத்துறைக்குப் பொறுப்புணர்ச்சி தேவை
போதை ஒழிப்பு என்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும். முக்கியமாக கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் படைப்புகளைப் பொறுப்புணர்ச்சியுடன் உருவாக்க வேண்டும். போதையின் தீமைகளைச் சொல்வது தவறு கிடையாது. ஆனால் அதைப் பெருமிதப்படுத்துவது ஒரு தலைமுறையையே சீரழித்துவிடும். பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் மீது பாசம் காண்பிக்கிறேன் என்று அவர்கள் பாதை மாறிப் போகும்போது பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சமூக வலைத்தளங்கள் மூலம் கிடைக்கும் பணம் மக்களைத் தவறான பாதையில் கொண்டு போகும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
மத்திய அமைச்சர்களின் வெறுப்புப் பேச்சு
நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்னையாக சாதி மத மோதல்கள் இருக்கின்றன. மத்திய அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளிலும் பதவிகளிலும் இருப்பவர்களே இப்போது வெறுப்புப் பேச்சுகளைப் பேசுகிறார்கள். இரு பிரிவினருக்கு இடையில் மோதலைத் தூண்டும் விதமாகச் செயல்படுகிறார்கள். தனிப்பட்ட அவர்களது கொள்கைகள் காரணமாக இந்தியாவின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் நாசகார வேலைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்றார்.
Chief Minister Stalin said that state governments should work together with the central government to eradicate drug addiction in the country.