ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ. 3 கோடியில் திருமண மண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | MK Stalin |

முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா அறிவிக்க வேண்டும் என்று வழிமொழிகிறோம்...

கிழக்கு நியூஸ்

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ. 3 கோடி செலவில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தி வருகிறார்கள். அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர், தொடர்ந்து பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் நிறுவப்பட்டுள்ள உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

“திமுக ஆட்சி முதன்முதலில் அமைந்தபோது பல்வேறு சமூகங்களைச் சார்ந்தவர்கள் தங்கள் மக்களுக்கான கல்வி மேம்பாட்டிற்காக கல்லூரிகளைத் தொடங்க திட்டமிட்டார்கள். அவை அனைத்திற்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அனுமதி வழங்கினார். குறிப்பாக முக்குலத்தோர் சமூகம் தாங்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் கல்லூரிகளை அமைக்க திட்டமிட்டார்கள். அதனடிப்படையில் தேவர் கல்வி சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் சார்பாக பசும்பொன் தேவர் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதோடு, 44.94 ஏக்கர் நிலத்தையும் கருணாநிதி வழங்கினார்.

அத்தகைய கல்வி நிறுவனம் எந்த நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டதோ, அதை சீரழிக்கும் வகையில் சில தனிநபர்களால் அது கையகப்படுத்தப்பட்டு பல பிரச்னைகள் நடந்து கொண்டிருந்தன. 2021-ல் நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் அதை மீட்டெடுத்துள்ளோம். இப்போது அரசு மேற்பார்வையில் அந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இன்னும் சிறப்பாக நடத்த நிர்வாக ரீதியாக அனைத்து உதவிகளையும் நமது திராவிட மாடல் அரசு நிச்சயமாகச் செய்யும் என்ற நற்செய்தியை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். தேவர் ஜெயந்தி விழாவின்போது கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், வெயில் மற்றும் மழையிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையிலும், பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் ரூ. 1.55 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் அரங்கைக் கடந்த ஆண்டு திறந்து வைத்தேன். பசும்பொன்னில் புதிதாக ஒரு திருமண மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்துகொண்டிருக்கிறது. அந்தக் கோரிக்கையை உடனடியாக ஏற்று, ரூ. 3 கோடி மதிப்பீட்டில், முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று இந்த நேரத்தில் நான் உறுதியளிக்கிறேன். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வீரராகப் பிறந்தார், வீரராக வாழ்ந்தார், வீரராக மறைந்தார். ஏன்? மறைவுக்குப் பிறகும் வீரராகப் போற்றப்படுகிறார்" என்று கலைஞர் கருணாநிதி சொல்வார். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க நாங்களும் வழிமொழிவோம்” என்றார்.

Chief Minister M.K. Stalin has announced that a marriage hall will be constructed in Pasumpon in the name of Muthuramalinga Thevar.