கோப்புப்படம் 
தமிழ்நாடு

பொள்ளாச்சி விவகாரம்: முதல்வரின் சவாலை ஏற்ற எடப்பாடி பழனிசாமி

"நான் கூறிய கருத்து தவறாக இருந்தால், நானும் ஏற்றுக் கொள்கிறேன்." - எடப்பாடி பழனிசாமி

கிழக்கு நியூஸ்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான, தண்டனையை மேலும் கடுமையாக்குவதற்காகவும் பிஎன்எஸ் மற்றும் பிஎன்எஸ்எஸ் சட்டங்களில் மாநில சட்டத் திருத்தத்துக்கும், தமிழ்நாடு 1998-ம் ஆண்டு பெண்ணுக்குத் துன்பம் விளைவித்தலைத் தடை செய்யும் சட்டத்திருத்தத்துக்கும், சட்டமுன்வடிவுகளை பேரவையின் ஒப்பதலுக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று முன்வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இடையே சட்டப்பேரவையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தார்கள்.

நீட் தேர்வைத் தங்களால் ரத்து செய்ய முடியாது, ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே இருப்பதாகவும் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நீட் விலக்கைப் பெற்றிருப்போம் என்று எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார்.

தொடர்ந்து, பொள்ளாச்சி விவகாரம் குறித்து இருவரும் சவால் விடுக்கும் அளவுக்குத் தீவிரமடைந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

பொள்ளாச்சி விவகாரத்தில் 24 மணி நேரத்தில் 3 பேர் கைது. உண்மைக்குப் புறம்பான கருத்துகளை முதல்வர் கூறுகிறார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

பொள்ளாச்சி வழக்கில் 12 மணி நேரத்துக்குப் பிறகு வழக்குப்பதிவு. 12 நாள்களுக்குப் பிறகே குற்றவாளிகள் கைது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் 24 மணி நேரத்துக்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தனது வாதத்தை நிரூபிக்காவிட்டால், நான் சொல்லும் தண்டனையை ஏற்கத் தயாரா? நான் சொல்வது தவறு என்றால், நீங்கள் சொல்லும் தண்டனையை ஏற்க நான் தயார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

நான் கூறிய கருத்து தவறாக இருந்தால், நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் பேசிய கருத்துகள் அவைக் குறிப்பில் பதிவாகியுள்ளன.