சென்னையில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், எது வந்தாலும் சமாளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை நிலவரங்கள், மழை பாதிப்புகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொண்ட ஆய்வில், மாவட்ட ஆட்சியர்களிடம் காணொலி வாயிலாகப் பேசி விவரங்களைக் கேட்டறிந்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்,
"ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்துள்ளது. அதற்கு ஏற்கெனவே இரு நாள்களாக மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அதை மேற்பார்வையிடுவதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளோம். இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக இதுவரை செய்தி இல்லை. எது வந்தாலும் அதை சமாளிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசு தயாராக இருக்கிறது.
தென்காசி பகுதிக்குச் செல்ல அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை அறிவுறுத்தியுள்ளோம். திருநெல்வேலிக்கு கே.என். நேரு நேற்று சென்றார். திருச்சியிலும் மழை பெய்ததால், அவர் திருச்சி வந்துள்ளார். மீண்டும் திருநெல்வேலி செல்லுமாறு அவரை அறிவுறுத்தியுள்ளோம்.
ஏற்கெனவே வழங்கிய பேரிடர் நிவாரண நிதி போதுமானதாக இல்லை" என்றார் முதல்வர் ஸ்டாலின்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது தொடர்புடையக் கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஒன்று சேர்ந்து அதைக் கடுமையாக எதிர்ப்போம். எங்களால் முடிந்த அளவுக்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து அதைக் கடுமையாக எதிர்ப்போம்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.