சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர்ச் சூழல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளிலும் பதற்றம் நிலவி வருகிறது. துபாய், கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக இந்நாடுகளின் எண்ணெய் வளங்களின் மீது தாக்குதல் நடத்தியதால் உலக நாடுகளுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு
அதேபோல், கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணையையும் ஈரானின் புரட்சிகர காவல் படை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இதனால் உலக நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால், மத்திய அரசு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக குறைத்துள்ளது. மேலும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் உரை
நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து கடந்த மார்ச் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, “இந்தப் போர் உலகில் உருவாக்கியுள்ள கடினமான சூழ்நிலைகள் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, நாம் தயாராக இருக்க வேண்டும்; ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். கொரோனா காலத்தில் நாம் ஒற்றுமையுடன் சவால்களை எதிர்கொண்டோம்; இப்போதும் அதேபோல் தயாராக இருக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்
இந்நிலையில், இதனைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
“கொரோனா பெருந்தொற்று காலத்தைப் போல” என பிரதமர் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய மத்திய பாஜக அரசு, இதிலிருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை ஸ்கிரிப்ட்டை தற்போது கையிலெடுத்துள்ளது.
பாஜக ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்னையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அதிமுகவோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள்.
சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. "இத்தனைக்கும் பொறுப்பான மத்திய பாஜக அரசு என்ன செய்கிறது?" என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி” என்று பதிவிட்டுள்ளார்.
Chief Minister Stalin has questioned whether the supply of cylinders and foreign policy are in the hands of the state government.