நானே விளையாட்டுத் துறையைக் கவனிக்கலாமோ என்று தோன்றுகிறது அந்த அளவு உதயநிதி சிறப்பாக பணி செய்கிறார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழக விளையாட்டுத் துறை சார்பில் நடத்தப்பட்ட முதலமைச்சர் கோப்பை போட்டிகளின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.
அப்போது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
“இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளைப் பெற்று பரிசுகளைப் பெறும் வீரர் வீராங்கனைகளுக்குப் பாராட்டுகள். இத்தனை திறமையான இளைஞர்களை அடையாளம் காண உழைத்துக் கொண்டிருக்கும் துணை முதல்வர் உதயநிதிக்கு என் பாராட்டுகள்.
இளமை மற்றும் துடிப்புள்ள அமைச்சரிடம் இளைஞர்களின் நலனையும் விளையாடுத்துறை எதிர்காலத்தை ஒப்படைத்தால், எப்படி வெற்றிகரமாக அமையும் என்பதற்கு தமிழ்நாடு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
நம் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் உலக அரங்கில் வெற்றிகளைக் குவித்து நாட்டுக்குப் பதக்கங்களையும் வெற்றிக் கோப்பைகளையும் பெற்றும் தரப்போகும் திறமையான இளம் விளையாட்டு வீரர்களைப் பாராட்டும் இந்த விழாவை மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருக்கும் விளையாட்டுத்துறை அதிகரிகளையும் அலுவலர்களையும் பாராட்டுகிறேண்.
தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையின் பொற்காலமாக திமுக ஆட்சி இருக்கிறது. தேசிய அளவு போட்டிகளாக இருந்தாலும், சர்வதேச அளவிலான போட்டிகளாக இருந்தாலும் உயர் தரத்தில் நடத்தும் இடமாகத் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. தமிழக வீரர்கள் ஒவ்வொருவரும் நாங்கள் வெற்றியாளர்கள் என்று சொல்லி வெற்றி மீது வெற்றியைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணமாக பயிற்சியாளர்களுக்கும் எனது பாராட்டுகள்.
விளையாட்டை வளர்க்க, திறமையான வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க, உரிய அங்கீகாரம் வழங்க, ரூ. 37 கோடி பரிசுத்தொகையுடன் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் எப்படிப்பட்ட உயரங்களை அடைந்து கொண்டிருக்கிறது என்பது இளைஞர்களான உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால்தான் பொருளாதாரத்தில் எந்த மாநிலமும் சந்திக்காத இரட்டை இலக்க வளர்ச்சியை நாம் சாதித்துள்ளோம். இந்த சாதனைப் பயணம் விளையாட்டுத்துறையிலும் எதிரொலிக்கிறது.
தமிழ்நாடு போல் எந்த மாநிலமும் விளையாட்டிற்கும் விளையாட்டு வீரர்களுக்கும் இவ்வளவு உதவிகள் செய்திருக்க மாட்டார்கள் என்று நான் பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வேன். இந்த உழைப்பால் தமிழ்நாடு எத்தனையோ விருதுகளை வென்றிருக்கிறது. ஆனால் எங்களுக்கு பெரிய விருது எது தெரியுமா? தமிழ்நாட்டில் விளையாட்டை முதன்மைப் பணியாக எடுத்தால் நிச்சயம் நம்மால் சாதிக்க முடியும் என்று அரசின் திட்டங்கள், முன்னெடுப்புகளின் மீது நம்பிக்கை வைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டிகளில் பங்கெடுக்கிறீர்களே உங்கள் நம்பிக்கைதான் எங்களுக்கான பெரிய விருது.
அண்மையில் இதே நேரு உள் விளையாட்டு அரங்கில் கல்வியால் தமிழ்நாட்டிற்குப் பெருமை தேடித்தந்த மாணவர்களைப் பாராட்ட கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போது விளையாட்டால் உயர்ந்த மாணவர்களும் தங்களது சாதனைப் பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
இந்த சமயத்தில் கலைஞர் கருணாநிதி சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது. நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ஏராளமான பணிகளையும் முன்னெடுப்புகளையும் நாள்தோறும் செய்ததைப் பார்த்து, ஒரு விழாவில் பேசியபோது நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது என்று புகழ்ந்து பேசினார். இப்போது அதே ஏக்கம் எனக்கும் வந்திருக்கிறது. நானே விளையாட்டுத் துறையையும் கவனிக்கலாமே என்று எனக்குத் தோன்றுகிறது. துணை முதல்வர் உதயநிதியின் பணிகள் அப்படி உள்ளன.
விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவரும் உங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தி, முறையாக பயிற்சி பெற்று, திறமையால் நம் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேருங்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்ற முதல்வரான நானும், உங்கள் துறை அமைச்சரான உதயநிதியும் இருக்கிறார். களம் நமதே! வெற்றி நமதே!” என்றார்.