நெல் கொள்முதலில் ஈரப்பதத்தை 22% ஆக குறைப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு கோவையில் நடைபெற்று வருகிறது. இதனை நேற்று (நவ.19) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் வருகைக்கு முன்னதாக “தமிழ்நாட்டு உழவர்களின் சார்பில் நமது கோரிக்கைகள்” என்று தலைப்பிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் குறிப்பாக “கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை மதிப்பிடுவதற்காக மத்திய குழுக்கள் கடந்த அக்டோபர் 25 அன்று தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, ஈரப்பதத்தை 17% -ல் இருந்து 22% ஆகக் குறைப்பதற்கான உத்தரவுகள் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த உத்தரவுகளை உடனே பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாகக் குற்றம் சாட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிடுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
“உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்!
கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் வந்து சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது மத்திய பாஜக அரசு.
கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை? கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய மத்திய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்? உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு மத்திய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Chief Minister M.K. Stalin has alleged that the Central Government has rejected the Tamil Nadu government's request to reduce the moisture content in paddy procurement to 22%.