அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டைப் பார்வையிட்ட முதலமைச்சர் ANI
தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரருக்கு அரசு வேலை: முதலமைச்சர் அறிவிப்பு | MK Stalin |

காளைகளை அடக்கும் காளையர்களை பார்க்கும்போது தமிழ் மண்ணுக்கே பெருமையாக இருக்கிறது...

கிழக்கு நியூஸ்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகக் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் புகழ்பெற்றவையாக உள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அதன்படி தை மூன்றாம் நாளான இன்று, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, காலை 7 மணிக்குத் தொடங்கியது. தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் இப்போட்டியில், அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், ஆட்சியர் பிரவீன்குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன்பின் வாடிவாசலை விட்டு மாடுபிடி வீரர்களை நோக்கிக் காளைகள் சீறிப் பாய்ந்தன.

ஜல்லிக்கட்டைப் பார்வையிட்ட முதலமைச்சர்

இதற்கிடையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் பி.மூர்த்தி, கே.என். நேரு, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், எம்.பிக்கள் சு. வெங்கடேசன், தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளை உற்சாகத்துடன் கண்டு களித்த முதலமைச்சர், போட்டியில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கினார்.

ஜல்லிக்கட்டை பார்த்தால் வீரம் வரும்

பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியபோது கூறியதாவது: மதுரை மண் வீரம் விளைந்த மண். வீர விளையாட்டான உலகப் புகழ் பெற்ற அலங்கநல்லூர் பார்க்கும்போது நமக்கு வீரம் வருகிறது. இதில் காளைகளை அடக்கும் காளையர்களை பார்க்கும்போது தமிழ் மண்ணுக்கே பெருமையாக இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் சங்கம் வளர்த்த மதுரையில் அறிவுக்காக கலைஞர் நூற்றாண்டு நூலகம், தமிழர்களின் அடையாளமான வீர விளையாட்டுக்கு கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனையாகும்.

சிறந்த வீரருக்கு அரசு வேலை

இப்போது சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன். பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்டையி்ல கால்நடை பராமரிப்புத் துறையில் பணி வழங்கப்படும். உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான ரூ. 2 கோடி மதிப்பில் சிறந்த பயிற்சி மற்றும் உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்பதை அறிவிக்கிறன்” என்றார்.

Chief Minister Stalin announced that government jobs will be given to athletes who tame the most bulls in Jallikattu competitions.