தமிழ்நாடு

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் | TN Assembly |

ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் குழு அமைக்கப்படும்...

கிழக்கு நியூஸ்

ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் விரைவில் சட்டம் இயற்றப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

“நேற்றைய விவாதத்தில் மான்முக உறுப்பினர்கள் சிலர் ஆணவப்படுகொலைகளை குறித்து தெரிவித்த சில கருத்துக்களுக்கு நான் இப்பேரவைக்கு தங்கள் வாயிலாக பதிலளிக்க விரும்புகிறேன். தமிழர் போற்றி வந்த பண்பாடு. இடைக்காலத்தில் புகுந்தவர்களால் தொழில் வேற்றுமையானது சாதி வேற்றுமையாக மாற்றப்பட்டது. உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டது. மேல் கீழ் என்ற வேற்றுமை விதைக்கப்பட்டது. வேற்றுமை விதைக்கப்பட்ட உடனேயே ஒற்றுமைக்கான குரல்களும் தமிழ் மண்ணில் உரக்க ஒலித்ததைக் காண்கிறோம். பல சீர்திருத்த கருத்துக்கள் இயக்கமாகவே உருவெடுத்தன.

சீர்திருத்த கருத்துக்களைப் பரப்புரை செய்து வந்த அதே காலகட்டத்தில் அதற்கான சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டுவந்து சமூக சீர்திருத்த ஆட்சியைக் கருணாநிதி நடத்தினார்கள். அதன் வழித்தடத்தில் திராவிட மாடல் ஆட்சியை நாங்கள் நெஞ்சு நிமிர்த்தி நடத்தி வருகிறோம். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி இருக்கிறோம். பெரியார் பிறந்த நாளிலும் அம்பேத்கர் பிறந்த நாளிலும் இந்த நாடே உறுதிமொழி எடுக்கிறது. இதே அவையில் இந்த ஆண்டு ஏப்ரல் 29 அன்று உரையாற்றிய போது ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமைக்கான குறியீடாகவும் வகைச்சொல்லாகவும் இருக்கக்கூடிய காலனி என்ற சொல்லை நீக்குவோம் என்று நான் அறிவித்தேன். பள்ளி கல்லூரி விடுதிகளில் சாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக அவற்றை சமூக நீதி விடுதிகளாக பெயர் மாற்றி இருக்கிறோம்.

பிரதமரைச் சமீபத்தில் நேரில் சந்தித்து முக்கியமான ஒரு கோரிக்கையை நான் வைத்தேன். ஆதி திராவிடர் மற்ற பழங்குடியினர் பட்டியலில் உள்ள சாதி பெயரில் இறுதி எழுத்தில் முடிவடையும் ன் என்பதற்கு பதிலாக ர் என விகுதி மாற்றம் செய்து அந்த சமூக மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வழி செய்யும் வண்ணம் மத்திய அரசு உரிய சட்டம் இயற்ற விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை.

ஆனால் இத்தகைய சூழலில் நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் நமது மனதை வேதனை அடைய வைத்துள்ளன. இதற்காகவா நமது தலைவர்கள் போராடினார்கள் நாம் போராடி வருகிறோம் என்ற வேதனை ஏற்படுகிறது. உலகம் அறிவு மயமாகி வருகிறது ஆனால் அன்பு மயமாவதை அது தடுக்கிறது. உலகம் முழுக்க பரவி அறிவினால் மதிக்கப்பட்டு வரும் நம் தமிழ் சமுதாயம் உள்ளூரில் சண்டை போட்டு கொள்வது என்ன நியாயம் என்பதுதான் நம்மை வருத்தும் கேள்வியாக அமைந்திருக்கிறது.

எதன் காரணமாகவும் ஒருவரை மற்றவர் கொல்வதை நாகரிக சமுதாயத்தால் ஏற்க முடியாது. கொல்வதை மட்டுமல்ல பகைப்பதை, சண்டை போட்டுக் கொள்வதை, அவமானப்படுத்துவதை என எதையும் பண்பட்ட வளர்ச்சியுற்ற ஒரு சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவ்வப்போது ஏதேனும் ஒரு பகுதியில் நடந்துவிடும் ஒரு துயரமான சம்பவம் நம் நெஞ்சை உலுக்கி விடுகிறது. நம் சமுதாயத்தை தலைகுனியச் செய்துவிடுகிறது. பெண்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையே தாங்களே தீர்மானிக்கும் உரிமையைப் பறிக்கும் ஆணாதிக்கமும் இந்தக் குற்றச் செயல்களுக்கு பின்னால் ஒழிந்திருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

ஆணவப் படுகொலைகளை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்கள். சமீபத்திலே செங்கல்பட்டு மாவட்டத்திலே திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதைக்கு நூற்றாண்டு விழா மாநாட்டில், திராவிடர் கழக தலைவர் கீ வீரமணி தீர்மானமாக நிறைவேற்றி என்னிடத்தில் கொடுத்திருக்கிறார்கள். ஆணவப் படுகொலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி அதன் மூலம் இந்த அநீதியைத் தடுக்க வேண்டும் என்பது நம் அனைவரது ஆதங்கமாக இருக்கிறது.

ஆணவப் படுகொலை நடைபெறும்போது அது தொடர்பான வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இப்படுகொலைக்கு சாதி மட்டுமே காரணம் இல்லை. இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன. எதன் பொருட்டு நடந்தாலும் கொலை கொலைதான். அதற்கான தண்டனைகள் மிக மிக கடுமையாக தரப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். யாரும் எவரும் எதன் பொருட்டும் செய்த குற்றத்திலிருந்து தண்டனை இல்லாமல் தப்பிவிடக்கூடாது என்பதை காவல்துறைக்கு உத்தரவாக போட்டுள்ளோம். எனவே சட்டம் தன்னுடைய கடமையை செய்கிறது. அதே நேரத்தில் இக்கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை சமூக சீர்த்த இயக்கங்கள் மட்டுமல்ல அரசியல் இயக்கங்களும் பொதுநல அமைப்புகளும் செய்ய வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.

இது குறித்து தேவையான பரிந்துரைகள் அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஓர் ஆணையம் அமைக்கப்படும் என்பதை முக்கிய அறிவிப்பாக வைக்கிறேன். இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள், சட்ட வல்லுநர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்து தரப்பினர் கருத்துக்களையும் பெற்று, இப்பொருள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளிக்கிறேன்” என்றார்.