தமிழ்நாடு

சாதியக் கொடுமையை வென்ற கல்வி: பிளஸ் 2 தேர்வில் சின்னதுரை 469 மதிப்பெண்கள்!

கிழக்கு நியூஸ்

திருநெல்வேலியில் சாதியக் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தலித் மாணவர் சின்னதுரை. அதே பகுதியில் வசிக்கும் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சின்னதுரையை நீண்ட காலமாக சாதிய ரீதியில் துன்புறுத்தி வந்துள்ளார்கள். தலித் மாணவராக இருந்துகொண்டு கல்வியில் சிறந்து விளங்குவதே இதற்குக் காரணமாக இருந்துள்ளது.

சக மாணவர்களின் துன்புறுத்தலால் சின்னதுரை அச்சத்தில் பள்ளிக்குச் செல்லமாட்டேன் என வீட்டில் கூறியுள்ளார். இதுதொடர்பாக, பள்ளி ஆசிரியர்களிடம் கடந்தாண்டு ஆகஸ்டில் புகாரளிக்கப்பட்டது. ஆசிரியர்களிடம் புகாரளித்த அன்றைய நாள் இரவில் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சின்னதுரையின் வீட்டுக்கு வந்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளார்கள். தடுக்க வந்த சின்னதுரையின் தங்கையையும் அவர்கள் வெட்டியுள்ளார்கள்.

இதில் பலத்த காயமடைந்த சின்னதுரை மற்றும் அவரது தங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கியது.

சாதியக் கொடுமைக்கு ஆளான இந்த மாணவன் சின்னதுரை தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் தமிழ் பாடத்தில் 71 மதிப்பெண்களும், ஆங்கிலப் பாடத்தில் 93 மதிப்பெண்களும், பொருளியலில் 42 மதிப்பெண்களும், வணிகவியலில் 84 மதிப்பெண்களும், கணக்கியலில் 85 மதிப்பெண்களும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 94 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.