தமிழ்நாடு

எலி மருந்தால் விபரீதம்: குழந்தைகள் உயிரிழப்பு, பெற்றோருக்கு தொடர் சிகிச்சை!

ஒரு கட்டத்தில் எலி மருந்து காற்றில் கலந்து வீடு முழுவதும் பரவி, அதனால் இவர்கள் நால்வருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

சென்னை குன்றத்தூரில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் குழந்தைகள் மூச்சுத்திணறி இறந்த நிலையில், பெற்றோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கின்றனர் கிரிதரன்-பவித்ரா தம்பதியர். தனியார் வங்கியில் பணிபுரியும் இவர்கள் இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களது அடுக்குமாடிக் குடியிருப்பில் எலித் தொல்லை அதிகமாக இருந்துள்ளது.

எனவே அவற்றை கொல்லும் வகையில் வீட்டின் பல்வேறு இடங்களில் எலி மருந்து வைத்துள்ளார் கிரிதரன். ஒரு கட்டத்தில் எலி மருந்து காற்றில் கலந்து வீடு முழுவதும் பரவி அதனால் இவர்கள் நால்வருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தம்பதிகள் இருவரும், அவர்களின் இரு குழந்தைகளும் குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இவர்களின் 6 வயது குழந்தை வைஷ்ணவியும், 1 வயது குழந்தை சுதர்சனும் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கிரிதரன் பவித்ரா தம்பதியர் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனியார் பூச்சுக்கொல்லி நிறுவனத்தின் உதவியுடன் இந்த எலி மருந்தை தன் வீட்டில் கிரிதரன் வைத்தாரா அல்லது தாமாக எலி மருந்தை வைத்தாரா என்ற கோணத்தில் இந்த விவகாரம் தொடர்பாக குன்றத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.