தமிழ்நாடு

சிறுவன் உயிரிழப்பு: கழிவு நீர் கலந்த குடிநீர் காரணமா?

ராம் அப்பண்ணசாமி

சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்த பீஹாரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு. இந்த உயிரிழப்புக்குக் கழிவு நீர் கலந்த குடிநீர் காரணமாகக் கூறப்படுகிறது.

சைதாப்பேட்டையில் கட்டட வேலை பார்க்கும் பெற்றோருடன் வசித்து வந்தான் பீஹாரைச் சேர்ந்த சிறுவன் யுவராஜ். கடந்த இரு நாட்களாக மெட்ரோ குடிநீரைக் குடித்துவிட்டு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டான் யுவராஜ்.

அதன் பிறகு ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான் யுவராஜ். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி யுவராஜ் இன்று உயிரிழந்துள்ளான். குடிநீரால் பாதிக்கப்பட்ட சிறுவனின் தங்கையான 7 வயது சிறுமி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார்.

`கடந்த 10 நாட்களாக மெட்ரோ குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துகொண்டிருக்கிறது என இங்கே வசிக்கும் மக்கள் தகவலளித்தனர். இந்தத் தகவலை அடுத்து இந்தப் பகுதியில் இருக்கும் மெட்ரோ குடிநீர் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகே இந்த மரணம் குடிநீரால் ஏற்பட்டுள்ளதா எனத் தெரியும்’ என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

`இந்தப் பகுதியில் வரும் மெட்ரோ குடிநீரை அருந்தி 20-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை’ என்று அந்தப் பகுதியில் வசித்து வரும் மக்கள் தெரிவித்தனர்.

சிறுவனின் மரணத்தை அடுத்து சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் வினய் சிறுவனின் இல்லம் அமைந்திருந்திருக்கும் நுங்கம்பாக்கம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.