அமைச்சர் துரைமுருகன் (கோப்புப்படம்) ANI
தமிழ்நாடு

துணை முதல்வர் பதவியை யார்தான் வேண்டாம் என்பார்கள்: துரைமுருகன்

"நிர்வாகம் என்பது எல்லோரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய ஒன்று."

கிழக்கு நியூஸ்

துணை முதல்வர் பதவியைக் கொடுத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழலாம் என்றும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இதுதொடர்பாக, உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வியெழுப்பியபோது, "துணை முதல்வர் குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார்" என்றார்.

திமுக இளைஞரணியின் 45-வது ஆண்டு தொடக்க விழாவில் பேசியபோது, எந்தப் பொறுப்புக்கு வந்தாலும், இளைஞரணியை மறந்துவிட மாட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இந்த நிலையில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில், துணை முதல்வர் பதவியை யார்தான் வேண்டாம் என்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

துணை முதல்வர் பதவிக்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்காரர்கள் மத்தியில் இருப்பதாகவும், உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்றும் துரைமுருகனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு அவர் பதிலளித்ததாவது:

"துணை முதல்வர் பதவியைக் கொடுத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள். நிர்வாகம் என்பது எல்லோரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய ஒன்று. கூட்டு மந்திரிசபையாக நாங்கள் இயங்குகிறோம். தலைவர் என்ன முடிவை எடுக்கிறாரோ சாதக, பாதகங்களைப் பார்த்து அதன் வழியில் செல்வோம்" என்று துரைமுருகன் கூறினார்.