முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்) ANI
தமிழ்நாடு

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் சதிச்செயல்: முதல்வர் மு.க. ஸ்டாலின் | CM MK Stalin |

பாஜகவுக்கு பயந்து எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போடுகிறார்...

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் சதிச் செயலை நடத்த நினைக்கிறார்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

“நேற்று அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறோம். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஏற்பட்டிருக்கிற வாக்காள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற திட்டத்தை மையப்படுத்தி சீராய்வு என்ற பெயரில் ஒரு தீய செயலை, சதிச் செயலைத் தேர்தல் ஆணையம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. இதைத் தடுப்பதற்கான முயற்சியில் நமது அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து பேசி தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம். நேற்று உரையாற்றிய அனைவரும் நேர்மையாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்கள். அதற்கு உரிய அவகாசத்தைக் கொடுக்க வேண்டும். பதற்றம் இல்லாத காலத்தில்தான் அதைச் செய்ய முடியும். அப்படி அல்லாமல் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில் முழுமையான திருத்த பணிகளைச் செய்யத் தேர்தல் ஆணையம் நினைக்கிறது. இது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம். பிஹார் மாநிலத்தில் இதைத்தான் செய்தார்கள். இப்போது மற்ற மாநிலங்களிலும் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்தபோது அதற்கான முதல் எதிர்ப்புக்குரலைத் தமிழ்நாடு பதிவு செய்தது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பிஹாரின் தேஜஸ்வி யாதவும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக அந்த மாநிலத்தில் பெரிய புரட்சியையே செய்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையிலும் தேர்தல் ஆணையம் அதற்குரிய பதிலைச் சொல்லாமல் இருக்கிறது.

பிஹாரைப் போலவே மற்ற மாநிலங்களிலும் இதை நடத்துவதை நிறுத்த வேனுட்ம் என்றுதான் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டித் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

நமது கூட்டத்தில் எதிர்க்கட்சியாக திகழும் அதிமுக பங்கேற்கவில்லை. இன்னும் சில கட்சிகள் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் காட்டி வருகிறார். பாஜகவுக்குப் பயந்து தேர்தல் ஆணைய நடவடிக்கையை எதிர்க்கப் பயப்படுகிறார். அதே நேரத்தில் அதிமுக தொண்டர்களுக்கு அறிக்கையும் வெளியிடுகிறார். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மீது அவருக்குச் சந்தேகம் இருப்பது தெரிகிறது ஆனால் அவர் அதை வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. தான் பாஜகவின் பாதம் தாங்கி பழனிசாமி என்பதை நொடிக்கு ஒருமுறை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.

பாஜக எப்படிப்பட்ட சதிச் செயலைச் செய்தாலும் அவர்களால் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக நான் குறிப்பிடுகிறேன். அந்த ஆத்திரத்தில் தான் பிரதமர் மோடி பிஹாரில் பொய் பேசி வருகிறார். எல்லாருக்குமாக விளங்கக் கூடிய பிரதமர் தமிழ்நாட்டைக் காட்டி பிஹாரில் வெறுப்புப் பேச்சைப் பேசியிருக்கிறார். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் எல்லோரும் சகோதரத்துவத்துடன் பழகும் நம்மைப் பற்றி இழிவாகப் பேசி, பிஹாரில் வாக்கு அரசியலுக்காக பொய் நாடகத்தை நடத்தியிருக்கிறார். நான் பிரதமரைக் கேட்கிறேன், பிஹாரில் பேசிய அதே கருத்தைத் தமிழ்நாட்டில் வந்து பேச முடியுமா? பேசும் தைரியம் இருக்கிறதா? யார் என்ன சதி செய்தாலும், அவதூறுகளை நம் மீது பரப்பினாலும் எவ்வளவு போலி செய்திகளை உருவாக்கினாலும் 2026-ல் திமுக தலைமையில் ஆட்சி நிச்சயம் அமையும் என்று உறுதியாகக் கூறுகிறேன்” என்றார்.

Chief Minister M.K. Stalin accuses conspiracy under the name of Special Intensive Revision.