தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தமிழ்நாடு தேர்தலில் இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்: தலைமைத் தேர்தல் ஆணையர் | Chief Election Commissioner |

தமிழ்நாட்டில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவேண்டும் என்று கட்சிகள் பரிந்துரைத்துள்ளன...

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 12.5 லட்சம் பேரும், 20-29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் ஒரு கோடி பேரும் உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார், பிப்ரவரி 25 அன்று தமிழ்நாடு வந்தார். இதையடுத்து நேற்று (பிப். 26) சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கம்

இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

”தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 188 பொது தொகுதிகள், 44 அட்டவணை சாதி தொகுதிகள், 2 அட்டவணை பழங்குடியினர் தொகுதிகள் உள்ளன. 2025 அக்டோபர் 27 முதல் 2026 பிப்ரவரி 23 வரை தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் எளிய, நேரடியான, தெளிவான, வெளிப்படையான நோக்கம், தகுதியுள்ள எந்த வாக்காளரும் விலக்கப்படக் கூடாது, அதேநேரம் தகுதியற்ற எந்த நபரும் சேர்க்கப்படக் கூடாது என்பதே. தமிழ்நாட்டில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவேண்டும் என்று கட்சிகள் பரிந்துரைத்துள்ளன. அனைத்து காரணிகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு இதுகுறித்து முடிவு செய்யப்படும்.

தேர்தல் தயாரிப்புப் பணிகள் தீவிரம்

தமிழ்நாடு தேர்தலுக்கு சுமார் 75,000 வாக்குச் சாவடிகளுடன் செல்லவுள்ளது. அவற்றில் 44,000 கிராமப்புற வாக்குச் சாவடிகள். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் முழுமையான நேரலை வசதி இருப்பதால் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். வாக்குச் சாவடிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு முன்னதாக 2 சுற்றுகள் தபால் வாக்குகள் எண்ணப்படும். வாக்காளர்களின் வசதிக்காக, ஒரு வாக்குச் சாவடிக்கு சராசரியாக 756 வாக்காளர்கள் மட்டுமே இருப்பார்கள். இதனால் வாக்களிப்பு வசதியாகவும் தடையின்றியும் நடைபெறும். பெண்கள் நிர்வகிக்கும் வாக்குச் சாவடிகள் 258, உடல் ஊனமுற்றோர் நிர்வகிக்கும் வாக்குச் சாவடிகள் 47, மற்றும் சுமார் 265 மாதிரி வாக்குச் சாவடிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ளன.கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் இருந்து, மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகரிகளுடன் தேர்தல் தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்தோம்.

குடவோலை முறையின் பெருமை

சமீபத்தில், தேர்தல் ஆணையம் உலக அளவில் 72 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச மாநாடு ஒன்றை நடத்தியது. உலகெங்கிலும் உள்ள தலைமை தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணையர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் பங்கேற்றனர். அங்கு, ஆணையம் உலகிற்கு தமிழ்நாட்டின் 10-ம் நூற்றாண்டு முதல் நடைமுறையில் இருந்த குடவோலை முறையைப் பற்றி விளக்கியது. தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருமை. தமிழ்நாட்டு வாக்காளர்கள் அனைவரையும் அதை கொண்டாடுமாறு வேண்டுகிறேன்.

வாக்காளர்கள் புள்ளிவிவரம்

இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முன்பிருந்த வாக்காளர் பட்டியலில் இருந்த பல இறந்த வாக்காளர்கள், இடமாற்றம் செய்தவர்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் பெயர் இருந்தவர்கள் சரியாக நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 2.89 கோடி பெண் வாக்காளர்களும், 2.77 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ளனர். திருநர் சமூகத்தினர் 7,617 பேரும், 81-85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் சுமார் 4 லட்சம் பேரும் உள்ளனர். வரவிருக்கும் தமிழ்நாடு தேர்தலில் இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரத்யேகமாக 3,060 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது தமிழ்நாட்டில் 18-19 வயதுக்கு இடைப்பட்ட வாக்காளர்கள் 12.5 லட்சம் பேரும், 20-29 வயதுக்கு இடைப்பட்ட வாக்காளர்கள் சுமார் ஒரு கோடி பேரும் உள்ளனர்.” என்றார்.

Chief Election Commissioner (CEC) Gyanesh Kumar said "Tamil Nadu is going to witness more than 12.5 lakh voters, which will be between 18-19 years of age and nearly 1 crore voters between 20-29 years of age"